ad

தாமான் செலாயாங் பாருவில் நீர் அழுத்தப் பிரச்சனைக்கு தீர்வு காண பழைய குழாய்கள் மாற்றம்

19 செப்டெம்பர் 2025, 10:03 AM
தாமான் செலாயாங் பாருவில் நீர் அழுத்தப் பிரச்சனைக்கு தீர்வு காண பழைய குழாய்கள் மாற்றம்

ஷா ஆலம், செப் 19 : தாமான் செலாயாங் பாரு குடியிருப்பாளர்கள் நீண்ட காலமாக
எதிர்நோக்கி  வரும் குறைந்த நீர் அழுத்தப் பிரச்சனையைச் சமாளிக்க பழைய குழாய்களை மாற்றும் பணியை பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக ஜாலான் செலாயாங் பாருவில் மேற்கொள்ளப்படும் 700 மீட்டர் அஸ்பெஸ்டாஸ் சிமென்ட் குழாய்களை மாற்றும் பணி  இந்த டிசம்பரில் இது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரி எலினா பாஸ்ரி கூறினார்.

ஜாலான் 14 மற்றும் ஜாலான்  16 ஆகியவற்றை உள்ளடக்கிய அடுத்த குத்தகை பணி 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு  2026 ஆம் ஆண்டு மே மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என அவர் சொன்னார்.

அந்த குடியிருப்பு பகுதியில் மீதமுள்ள 6.8 கி.மீ குழாய்களை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்  பணிகள்  2026 அக்டோபர் மாதம் தொடங்கி 2027 இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் இன்று
ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தாமான் செலாயாங் பாருவில் வசிப்பவர்களிடமிருந்து குறைந்த நீர் அழுத்த பிரச்சினைகள் குறித்த புகார்கள் தொடர்பான செய்தியை 
நேற்று தி ஸ்டார் செய்தித்தாள் வெளியிட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள பழைய குழாய்களை மாற்றுவதற்கு 70 லட்சம் வெள்ளியை தாங்கள்
ஒதுக்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியது.

அந்தப் பகுதியில் உள்ள பழைய குழாய்கள் உடையும்  அபாயத்தில்  இருப்பதால் நீர் அழுத்தத்தை அதிகரிக்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது என்று எலினா விளக்கினார்.

தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்காக அழுத்தத்தைக் குறைக்கும் வால்வுகளை  நிறுவுவதன் மூலம் நீர் அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் பகுதியில் சராசரி நீர் அழுத்தம் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட வரம்பிற்குள் பராமரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள ஆயர் சிலாங்கூரின் 31,000 கிலோ மீட்டர் நீள வலையமைப்பில்  உள்ள பல குழாய்கள்  50 முதல் 60 ஆண்டுகள் பழமையானவை என்றும், இதனால் நிலையான பராமரிப்பு
பெரும் சவாலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.