ஜகார்த்தா, செப் 19: மத்திய பப்புவா மாகாணத்தில் உள்ள நபிரே மாவட்டத்தில் இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இரண்டு முதல் மூன்று வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (BNPB) செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.
"பல வீடுகள் சேதமடைந்தன, விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்தன, அரசு அலுவலகங்களில் கூரைகள் இடிந்து விழுந்தன, பாலம் ஒன்று இடிந்து விழுந்தது, அதே நேரத்தில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு விநியோகங்களும் பாதிக்கப்பட்டன," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பேரழிவின் தாக்கத்தை முழுமையாக மதிப்பிடுவதற்காக நபிரே மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பின் (BPBD) விரைவு பதிலளிப்பு குழு இன்னும் சம்ப இடத்தில் உள்ளது.
பின்அதிர்வுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் வீடுகளில் மீண்டும் குடியேறும் முன் அவை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் BNPB வலியுறுத்தியது. அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் உள்ள வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டியது.
இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் அமைப்பின் (BMKG) தரவுகளின்படி, மேற்கு இந்தோனேசிய நேரப்படி அதிகாலை 1.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நபீரிலிருந்து வடமேற்கே 29 கிலோமீட்டர் தொலைவில் 24 கிலோமீட்டர் ஆழத்தில் அதன் மையம் அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.