ஷா ஆலம், செப். 19 - சின் சியூ மீடியா கார்ப்பரேஷன் பெர்ஹாட் மற்றும் சினார் காரங்கிராப் சென். பெர்ஹாட் நிறுவனங்களுக்கு தலா 100,000 வெள்ளி அபராதம் விதிக்கும் மலேசியா தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்.சி.எம்.சி.) நடவடிக்கையை மலேசிய ஊடக மன்றம் கடுமையாகக் கருதுகிறது.
தகவல் துல்லியத்தின் முக்கியத்துவத்தையும் நாட்டின் சின்னங்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஊடக மன்றம் ஒப்புக்கொள்கிறது. ஆனால், அபராதத்தின் அளவு அதிகப்படசமானது என்பதோடு அது சுமத்தப்பட்ட குற்றத் தன்மைக்கு ஏற்றதாக இல்லை என்பதை வலியுறுத்தியது.
இத்தகைய கடுமையான தண்டனைகள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஆசிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி சுய தணிக்கை செய்வதற்குரிய சூழலை உருவாக்கக்கூடும்.
இதனால் பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஊடகங்களின் பணியை பலவீனப்படுத்தக்கூடும் என அது குறிப்பிட்டது.
இருப்பினும், 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் எம்.சி.எம்.சி.க்கு உள்ள அதிகாரத்தை மன்றம் மதிக்கிறது. ஆனால், அதிகார அமலாக்கம் சமநிலையான மற்றும் நியாயமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
தற்செயலாக உண்டாகும் பிழைகள் வருந்தத்தக்கதாக இருந்தாலும் கூட அவை பொருத்தமான திருத்த நடவடிக்கைகளுடன் கையாளப்பட வேண்டும். அதை விடுத்து செய்தி அறையின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடிய, பொது நலனை தடுக்கக்கூடிய அல்லது ஊடக சுற்றுச்சூழல் அமைப்பில் குரல்களின் பன்முகத்தன்மையைக் கட்டுப்படுத்தக்கூடிய கடுமையான தண்டனைகள் மூலம் அல்ல என்று அம்மன்றம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
சினார் ஹரியான் மற்றும் சின் சியூ டெய்லி ஆகிய ஊடகங்களுக்கு தலா 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) இன்று கூறியிருந்தது.
சின் சியூ மீடியா நிறுவனம் தனது டிஜிட்டல் செய்தித்தாளில் முழுமையற்ற தேசியக் கொடியின் வரைபடத்தை பதிவேற்றியது விசாரணையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்.சி.எம்.சி. இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
உள்ளூர் அரசியல் கட்சியின் உயர் தலைமைப் பதவியுடன் தொடர்புப்படுத்தி தேசிய போலீஸ் படைத் தலைவர் பற்றிய தவறான தகவல்களைக் கொண்ட ஒரு சுயவிவரக் குறிப்பை இண்ட்ஸ்டாகிராமில் பதிவேற்றியதற்காக சினார் காராங்கிராப் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.