கோலாலம்பூர், செப் 19 - நாடு முழுவதும் உள்ள 34,400 மலைச் சரிவுகளில் சுமார் 1,087 சரிவுகள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பொதுப்பணித் துறையால் செயல்படுத்தப்பட்ட பேரிடர் செயல்பாட்டு அறையின் (பிக்பென்) தீவிரக் கண்காணிப்பில் அவை வைக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 1,087 மலைச் சரிவுகளில் 1,066 தீபகற்ப மலேசியாவிலும் ஏழு சபாவிலும் ஒன்று சரவாக்கிலும், 13 லாபுவானிலும் இருப்பதாக பொணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நத்தா லிங்கி கூறினார்.
செயற்கை நுண்ணறிவு உட்பட சமீபத்திய தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் அனைத்து வகை சரிவுகளையும் பிக்பென் அமைப்பு கண்காணிப்பதோடு பேரிடர் தயார்நிலையிலும் பிக்பென் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த அமைப்பை மேலும் மேம்படுத்த கூடுதல் தொழில்நுட்ப கூறுகள் பயன்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது என்று இன்று பொதுப்பணி அமைச்சின் வடகிழக்கு பருவமழைக்கு முந்தைய தயார்நிலை திட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மாவட்ட அளவில் உள்ள பொதுப்பணி அதிகாரிகளின் உள்ளீடுகளைப் பயன்படுத்தி இந்த பிக்பென் வெள்ளம், நிலச்சரிவுகள், சாலை பழுது மற்றும் பால சேதம் உள்ளிட்ட பேரிடர் மீது கிட்டத்தட்ட நிகழ்நேர கண்காணிப்பை வழங்குகிறது என்று நந்தா மேலும் கூறினார்.
இந்தத் தகவல்களை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா), மாநில அரசுகள் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் போன்ற அரசு அமைப்புகள் மட்டுமல்லாமல், கையடக்க செயலி மூலமாகவும் பொதுமக்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
முழுமையாக அல்லது பகுதி மூடப்பட்ட சாலைகளின் நிலை, கிடைக்கக்கூடிய மாற்று வழிகளுடன், சாலைப் பயனர்கள் சரிபார்க்கவும் இந்த அமைப்பு உதவுகிறது.