மூவார், செப். 19 - குடும்ப உறுப்பினரின் வீடு மற்றும் வாகனத்திற்கு தீ வைத்ததோடு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு தன் தந்தையை தாக்கி காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் தொழில்நுட்பர் ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அந்த 32 வயது சந்தேக நபரை விசாரணைக்காக அடுத்த புதன்கிழமை வரை காவலில் வைக்க போலீசார் செய்த மனுவை இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
சந்தேக நபர் காயங்களுக்காக இன்னும் சிகிச்சை பெற்று வருவது மற்றும் மனநலப் பிரச்சனைகள் தொடர்பில் மருத்துவமனையால் கண்காணிக்கப்படுவது ஆகிய காரணங்களால் தடுப்புக் காவல் நடவடிக்கை இங்குள்ள சுல்தானா பாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.
கம்போங் தெங்கா, ஜாலான் பக்ரியில் கடந்த புதன்கிழமை காலை 9.43 மணிக்கு நடந்த சம்பவத்தில் சந்தேக நபர் தனது 70 வயது தந்தையை பிரம்பு மற்றும் கத்தியால் தாக்கினார் என்று மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.
சந்தேக நபர் மெத்தம்பெத்தமைன் போதைப் பொருளைப் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறிய அவர், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 436 மற்றும் 324வது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக சொன்னார்.