உலு சிலாங்கூர், செப். 19 - முப்பது ஆண்டுகளுக்கும் மேல் காத்திருந்த பிறகு 363 முன்னாள் பெல்டா சுங்கை புவாயா குடியேற்றவாசிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் இறுதி இழப்பீட்டுத் தொகையான 7 கோடியே 42 லட்சம் வெள்ளியைப் பெற்றுள்ளனர்.
இந்த இறுதி கட்ட இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து 1994 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மேம்பாட்டாளரான எம்.ஜே.டி. பெர்ஹாட் செலுத்திய மொத்த இழப்பீட்டுத் தொகையின் மதிப்பு 37 கோடியே 50 லட்சம் வெள்ளியாகும். இந்த ஆண்டு மட்டும் அனைத்து குடியேறிகளுக்கும் 11.0.5 கோடி வெள்ளி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1994 முதல் முடங்கிக் கிடந்த இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பின் விளைவாக இந்த தீர்வு கிடைத்ததாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்த 2018 முதல் தொடங்கி மாநில அரசு மட்டுமல்ல, எம்ஜேடி பெர்ஹாட், பத்தாங் காலி தொகுதி, உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு அலுவலகம், மாவட்ட நில அலுவலகம், அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ பி கமலநாதன் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து ஏற்படுத்திய மற்றொரு தீர்வாகும்.
எனவே, 363 குடியேறிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த அனைத்து தரப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களில் சிலர் 80 வயதை அடைந்து விட்டனர். சிலர் காலமாகி விட்டார்கள். ஆயினும் அரசினால் அதைத் தீர்க்க முடிந்தது என்று அவர் கூறினார்.
சுங்கை புவாயா முன்னாள் பெல்டா குடியேற்றவாசிகளுக்கு வெ.7.42 கோடி இறுதிக் கட்ட இழப்பீடு
19 செப்டெம்பர் 2025, 5:34 AM