கோலாலம்பூர், செப். 19 - பொதுமக்கள் தங்கள் மைகார்டில் உள்ள சிப் எனப்படும் நுண்சில்லு முறையாக செயல்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பும் போது அடையாள சரிபார்ப்புக்கு மைகார்டை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே ரோன்95 பெட்ரோலுக்கான இலக்கு மானியத்தை அனுபவிக்க முடியும் என்று அவர் கூறினார்.
சிப் சேதமடைந்தால் அல்லது படிக்க முடியாத நிலையில் இருந்தால் கவலை வேண்டாம். நீங்கள் நாடு முழுவதும் உள்ள எந்த தேசிய பதிவுத் துறை அலுவலகத்தை அல்லது முகப்பிடத்தை அணுகலாம். சரிபார்ப்பு அதே நாளில் நிறைவடையும்.
இது எளிதானது மற்றும் விரைவானது! கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். இந்த சிறப்பு பெட்ரோல் மானியத்தின் வழி நீங்களும் உங்கள் நண்பர்களும் பயனடைய முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் இன்று முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இலக்கு மானியம் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாத இறுதிக்குள் ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 1.99 வெள்ளியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மலேசிய மக்களுக்கு பிரதமர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார். கடவுள் அருளால் இந்த மாத இறுதிக்குள் ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு வெ.1.99 ஆகக் குறைக்கப்படும்.
சிறிது காலம் பிடித்தாலும், அவர் தனது வார்த்தையில் உறுதியாக இருக்கிறார். அவர் தனது வார்த்தையின்படி நடக்கும் ஒரு மனிதர். மலேசிய மக்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என்று சைபுடின் கூறினார்.
மக்களுக்கு உதவுவதற்கும் அனைத்து தரப்பினரின் நலனைப் பாதுகாப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை முழு நேர்மையுடனும் பொறுப்புடனும் மேம்படுத்துவதற்கும் மடாணி அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, மாத இறுதிக்குள் ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு வெ.1.99 ஆகக் குறைக்கப்படும் என்ற தனது உறுதிமொழியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


