ஷா ஆலம், செப். 19 - சினார் ஹரியான் மற்றும் சின் சியூ டெய்லி ஆகிய ஊடகங்களுக்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) தலா 100,000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது.
முழுமையில்லாத தேசியக் கொடியை பதிவேற்றம் செய்ததற்காக சின் சியூ பத்திரிகைக்கும் தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐ.ஜி.பி.) டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் குறித்த தவறான தகவலை வெளியிட்டதற்காக சினார் ஹரியான் ஏட்டிற்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டது என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.
சின் சியூ மீடியா நிறுவனம் தனது டிஜிட்டல் செய்தித்தாளில் முழுமையற்ற தேசியக் கொடியின் வரைபடத்தை பதிவேற்றியது விசாரணையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்.சி.எம்.சி. இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
உள்ளூர் அரசியல் கட்சியின் உயர் தலைமைப் பதவியுடன் தொடர்புப்படுத்தி தேசிய போலீஸ் படைத் தலைவர் பற்றிய தவறான தகவல்களைக் கொண்ட ஒரு சுயவிவரக் குறிப்பை இண்ட்ஸ்டாகிராமில் பதிவேற்றியதற்காக சினார் காராங்கிராப் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த இரண்டு விசாரணைகளும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233(1)(ஏ) பிரிவின் கீழ் நடத்தப்பட்டன. அதே சட்டத்தின் 233(2) பிரிவின் கீழ் தண்டனையும் 243வது பிரிவின் கீழ் அபராதமும் விதிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜாலூர் ஜெமிலாங் என்பது இறையாண்மை, ஒற்றுமை மற்றும் தேசிய கெளரவத்தின் சின்னம் என்றும் அது எல்லா நேரங்களிலும் துல்லியமாகவும் கண்ணியமாகவும் காட்டப்பட வேண்டும் என்றும் எம்.சி.எம்.சி. வலியுறுத்தியது.
தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தவறான உள்ளடக்கத்தைப் பரப்புவது பொது ஒழுங்கையும் அதிகாரிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும்.
ஆகவே, வெளியிடப்படும் உள்ளடக்கத்தின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை எப்போதும் உறுதி செய்யும்படி அனைத்து ஊடக நிறுவனங்களும் சமூக ஊடக பயனர்களும் நினைவூட்டப்படுகிறார்கள் என்று அது குறிப்பிட்டது.
நாட்டின் நல்லிணக்கம் மற்றும் நிலைத்தன்மை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் அமலாக்கத்தை வலுப்படுத்தவும் பல்வேறு டிஜிட்டல் கல்வியறிவு முயற்சிகளை செயல்படுத்தவும் எம்.சி.எம்.சி. தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.