ஷா ஆலம், செப். 19 - அடுத்தாண்டு சிலாங்கூர் ஏற்று நடத்தவிருக்கும் 2026 மலேசியா விளையாட்டுப் போட்டிகளில் (சுக்மா) மொத்தம் 474 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அந்த போட்டி வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான விளையாட்டுகளைத் தாங்கிய நிகழ்வாக இது விளங்குகிறது.
மொத்தம் 469 போட்டிகளை மட்டுமே நடத்திய சரவாக்கின் முந்தைய சாதனையை இந்த எண்ணிக்கை முறியடித்துள்ளதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சுக்மா தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் 37 விளையாட்டுகளை உள்ளடக்கிய போட்டிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது வரலாற்றில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். கூடுதல் நிகழ்வுகளில் சைக்கிளோட்டம், மின் விளையாட்டு மற்றும் பெண்கள் பிரிவு ஆகியவையும் அடங்கும்.
பெண் விளையாட்டாளர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்ற அமைச்சரின் கோரிக்கையைத் தொடர்ந்து பெண்கள் பிரிவு நிகழ்வுகள் சேர்க்கப்பட்டன. மொத்தத்தில் ஆண் விளையாட்டாளர்களை உள்ளடக்கிய 239 போட்டிகள், பெண் விளையாட்டாளர்களை உள்ளடக்கிய 217 போட்டிகள் மற்றும் 18 கலப்பு விளையாட்டுப் போட்டிகள் இதில் இடம் பெறுகின்றன என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சிலாங்கூரின் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 53 தளங்கள் இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 12 ஊராட்சி மன்றங்கள், பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் விளையாட்டு வளாகங்களும் இதில் அடங்கும்.
சிலாங்கூரில் சைக்கிளோட்டப் பந்தயத் தட வசதி இல்லாததால் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய் நகரில் உள்ள தேசிய வேலோட்ரோம் தடம் சைக்கிளோட்ட நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது மாநில விளையாட்டு மன்றத்திற்குச் சொந்தமானது. எனவே அதைப் பயன்படுத்த விண்ணப்பிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் விளக்கினார்.
சுக்மா சிலாங்கூர் 2026 போட்டிக்கான மாநில அல்லது மாநில குழு பதிவு நவம்பர் 1 முதல் இரண்டு வாரங்களுக்கு திறந்திருக்கும் என்றும் நஜ்வான் அறிவித்தார்.
சிலாங்கூர் இளைஞர் மாநாட்டை முன்னிட்டு வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ராஜா மூடா மூசா மண்டபத்தில் தன்னார்வ முன் பதிவு விண்ணப்பம் தொடங்கப்படும் என்று நஜ்வான் கூறினார்.
சிலாங்கூர் சுக்மா போட்டி அடுத்தாண்டு ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாரா சுக்மா 2026 செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறும்.
நாட்டின் 22வது சுக்மா அதிகாரப்பூர்வ உருவச் சின்னமாக வெள்ளை கழுகு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் ரோமானிய எண் ஜோதி XXII சின்னமாக பயன்படுத்தப்படவுள்ளது .