கோலாலம்பூர், செப். 18 - வெள்ள நிலைமையை பார்வையிட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை சபாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற ஆசியான் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான 46வது பொது பேரவையை தொடக்கி வைத்தப் பின்னர், "நான் நாளை செல்கிறேன்" என்று அன்வார் ஊடகங்களிடம் சுருக்கமாகக் கூறினார்.
சபாவில் வெள்ள நிலைமை தற்போது மோசமடைந்து வருகிறது. அங்கு திறக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையங்களில் இன்று காலை 916 குடும்பங்களைச் சேர்ந்த 3,134 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்று மாலை இந்த எண்ணிக்கை 814 குடும்பங்களைச் சேர்ந்த 2,919 பேராக இருந்தது.
பாதிக்கப்பட்ட அனைவரும் ஆறு மாவட்டங்களில் உள்ள 27 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சபா மாநில பேரிடர் மேலாண்மை குழு
இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.
இதற்கிடையில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று பாப்பார், மெம்பாகுட் மற்றும் பொங்கவான் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
காலை 9.30 மணிக்கு செயிண்ட் பேட்ரிக் தேசியப் பள்ளியில் திறக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு சென்ற ஜாஹிட், அங்கு சுமார் 30 நிமிடங்கள் தங்கியிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசியப் பொருள் மற்றும் பண உதவிகளை வழங்கினார்.
போங்கவான் தேசியப் பள்ளி, போங்கவான் சமூக மண்டபம் மற்றும் பாப்பார் சமூக மண்டபத்தில் தங்கியுள்ள குடியிருப்பாளர்களையும் அவர் சென்று கண்டார்.
பாப்பாரின் கம்போங் மூக்கில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை ஜாஹிட் பார்வையிடவும் அங்குள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கிராம மக்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
வெள்ள நிலைமையைப் பார்வையிட பிரதமர் அன்வார் நாளை சபா பயணம்
18 செப்டெம்பர் 2025, 9:13 AM