ஷா ஆலம், செப்.18 - பிளஸ் நெடுஞ்சாலையின் 430.5வது கிலோ மீட்டரில் தெற்கு நோக்கி செல்லும் தடத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த இரண்டு லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்து சிலாங்கூரின் முக்கிய நீர் ஆதாரத்தை மாசுபடுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
அதிகாலை 4.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 22 இடைநிலை கொள்கலனில் (ஐ.பி.சி.) எண்ணெய் ஏற்றிச் சென்ற லோரியும் அரிசி ஏற்றிச் சென்ற மற்றொரு லோரியும் விபத்தில் சிக்கின.
இந்த விபத்தின் காரணமாக 10 கொல்கலன்களில் இருந்த எண்ணெய் கசிந்து நெடுஞ்சாலை வடிகால் வழியாக குண்டோங் துணை ஆற்றில் கலந்ததாக சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இந்த எண்ணெய் கசிவு சிலாங்கூர் ஆற்றில் கலக்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. இதனால் அந்த இடத்திலிருந்து சுமார் 13.3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளைப் பாதிக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்திய லுவாஸ், முழுமையான ஆய்வு மற்றும் ஆரம்ப துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள குழுக்களை அந்த இடத்திற்கு அனுப்பியது.
எண்ணெய் தொடர்ந்து பரவுவதைத் தடுக்க விபத்து நடந்த இடம் மற்றும் வடிகால்களில் மரத்தூள், கார்பன் மற்றும் எண்ணெய் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன என்று லுவாஸ் குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக சுத்தம் செய்யும்படி சம்பந்தப்பட்ட லோரி நிறுவனத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது. அதே நேரத்தில் லுவாஸ் களத்தில் நிலைமை மற்றும் துப்புரவுப் பணியின் மேம்பாடுகளை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.
அதே சமயம் நீர் வளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என அது குறிப்பிட்டது.