குவாந்தான், செப். 18 - கோல லிப்பிஸ், பெல்டா கெச்சாவ் 8இல் கட்டுப்பாட்டுச் சாவடியை டிரெய்லர் ஒன்று நேற்று அதிகாலை மோதியதில் அதன் ஓட்டுநரும் போலீஸ் பந்துவான் எனப்படும் உதவி போலீஸ்காரரும் காயமடைந்தனர்.
காலை 9.50 மணியளவில் சுங்கை டெமாவ் பகுதியிலிருந்து குவாந்தான் நோக்கி 28 வயது நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற அந்த டிரெய்லர் லோரி கட்டுப்பாட்டை இழந்து சம்பந்தப்பட்ட பாதுகாப்புச் சாவடியையும் ஒரு காரையும் மோதியதாக நம்பப்படுகிறது என்று லிப்பிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.
இந்த மோதலின் விளைவாக கட்டுப்பாட்டு சாவடியின் கூரை மற்றும் சுவர்கள் இடிந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளின் மீது விழுந்தன என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த லோரி ஓட்டுநர் மற்றும் கட்டுப்பாட்டுச் சாவடியில் இருந்த 23 வயது உதவிக் காவலர் தற்போது கோல லிப்பிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
சம்பவத்தின் போது அங்கிருந்த சேர்ந்த 31 வயதுடைய மற்றொரு உதவி போலீஸ்காரருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று இஸ்மாயில் குறிப்பிட்டார்.
இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43(1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சம்பவத்தை நேரில் கணாடவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் பாதுகாப்பு சாவடியை மோதியது - உதவிக் காவலர் காயம்
18 செப்டெம்பர் 2025, 6:43 AM