ஷா ஆலம், செப். 18 - மூன்றாவது துறைமுகத்தை உருவாக்கும் நோக்கில் நீடித்த மற்றும் போட்டித் தன்மைமிக்க பகுதியாக கேரித் தீவை மேம்படுத்துவதில் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) யாயாசான் சிலாங்கூருடன் விவேக ஒத்துழைப்பை நல்கும்.
அப்பகுதியை துறைமுகமாக மேம்படுத்துவதற்கு அங்கு 4,200 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இது அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் சிலாங்கூருக்கு அபரிமித பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரும் என அவர் குறிப்பிட்டார்.
அந்த 4,200 ஏக்கரில் சுமார் 2,500 ஏக்கர் கடலில் சார்ந்த பகுதியிலும் 1,700 ஏக்கர் கடலோரத்திலும் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மொத்தம் 4,200 ஏக்கரை உள்ளடக்கிய இப்பகுதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 13வது மலேசியத் திட்டத்திற்கு ஏற்ப தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பிரதேச (இட்ரிஸ்) வளர்ச்சிக்கான உந்து சக்தியாக விளங்கும் என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில அரசின் துணை நிறுவனமான பி.கே.என்.எஸ்.க்கும் இது அபரிமித வாய்ப்புகளை வழங்கும். மேலும் யாயாசான் சிலாங்கூரின் நிலையை வலுப்படுத்தி கல்வித் திட்டங்களுக்கான பங்களிப்பை அதிகம் வழங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்றார் அவர்.
நேற்று இங்கு நடைபெற்ற பி.கே.என்.எஸ் மற்றும் யாயசான் சிலாங்கூர் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிலத்தை யார் மேம்படுத்தவது (மத்திய அரசு அல்லது மாநில அரசு) என்பது குறித்து அடுத்த ஒரு மாத காலத்திற்குள் போக்குவரத்து அமைச்சுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
மாநில அரசின் அறங்காப்பாளர் என்ற முறையில் பி.கே.என்.எஸ். இதில் தீவிர பங்களிப்பைக் கொண்டுள்ளது.
மேலும், கேரித் தீவில் நிர்மாணிக்கப்படும் துறைமுகத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் பங்குரிமையை கொண்டிருக்கும் மாநில அரசின் பிரதிநிதியாகவும் அது செயல்படும் என்றார் அவர்.