ஈப்போ, செப். 18- மஞ்சோங், பந்தாய் ரெமிஸ் பகுதியில் நேற்று ஏற்பட்ட கனமழையுடன் கூடிய பலத்த புயல் காற்றில் 18 வீடுகளோடு ஒரு பள்ளிவாசலும் பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான தகவலை மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் செயல்குழுவின் புலனக் குழுவின் மூலம் காலை 8.56 மணிக்கு தாங்கள் பெற்றதாக மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (ஏபிஎம்) மஞ்சோங் மாவட்ட செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
கனமழை மற்றும் பலத்த காற்றைத் தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஏபிஎம் உறுப்பினர்கள் மதியம் 12.20 மணிக்கு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
தாமான் நெலாயன் 2, ஜாலான் பெங்கலான் பாரு மற்றும் கம்போங் சீனா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பள்ளிவாசல் மற்றும் குடியிருப்பாளர்களின் வீடுகளின் கூரைகள் சேதமடைந்து கசிவுகள் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டதாக என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேகமூட்டமான வானிலை நிலவும் நிலையில் மேலும் சேதத்தைத் தடுக்க பெரும்பாலான வீடுகளில் தற்போது பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
வானிலையின் அடிப்படையில் அவசர பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஆகக்கடைசி நிலவரங்களை மஞ்சோங் மாவட்ட ஏபிஎம் அவ்வப்போது வழங்கி வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
பந்தாய் ரெமிஸில் புயல் - 18 வீடுகள், பள்ளிவாசல் சேதம்
18 செப்டெம்பர் 2025, 1:55 AM