கோத்தா பாரு, செப். 17- குவா மூசாங், சோன்சோங் தோட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு கொங்சி வீட்டில் சக நாட்டவரைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கணவன் மற்றும் மனைவி உட்பட நான்கு மியான்மர் பிஜைகள் கைது செய்யப்பட்டனர்.
முப்பது முதல் 46 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய சந்தேக நபர்கள் அனைவரும் நேற்றிரவு 7.30 மணியளவில் குவா மூசாங், உலு காலாஸ் பாதுகாக்கப்பட்ட நிரந்தர வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கொங்சி வீட்டில் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் தெரிவித்தார்.
பொறாமையின் விளைவாக இந்த சம்பவம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் பாதிக்கப்பட்ட நபர் 30 வயதுடைய அப்பெண்ணை கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது, இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அவ்வாடவரை இறக்கும் வரை செம்பனை வெட்டும் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது என்று அவர் இன்று கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நான்கு சந்தேக நபர்களும் பயண ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாக கூறிய அவர், அவர்கள் அனைவரும் நேற்று இரவு தொடங்கி ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
கொலை குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 வது பிரிவு மற்றும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாததால் 1959/63 குடிநுழைவு சட்டத்தின் பிரிவு 6(1)(சி) வது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த புதன்கிழமை இங்குள்ள முக்கிம் பாவ் பஞ்ஜி அருகே ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 19 முதல் 60 வயதுடைய ஒரு ஆடவர் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை தடுத்து வைத்தத போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 16 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் மற்றும் கெத்தும் இலைகளை பறிமுதல் செய்ததாக முகமது யூசோப் தெரிவித்தார்
சக நாட்டவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் நான்கு மியன்மார் நாட்டினர் கைது
17 செப்டெம்பர் 2025, 9:31 AM