ஷா ஆலம், செப். 17 - நீண்ட விடுமுறையின் போது மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதில் காட்டும் ஆர்வத்தைத் தடுக்க உள்நாட்டு சுற்றுலா கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மலேசிய தின நீண்ட விடுமுறையின் போது தாய்லாந்துக்குச் சுற்றுலா செல்ல சுமார் 200,000 மலேசியர்கள் எடுத்த முடிவினால் சுமார் 13 கோடி வெள்ளி நாட்டிலிருந்து வெளியேறியதாகப் புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் கூறினார்.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை தாருங்கள் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு சுற்றுலா நமது முதல் தேர்வாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்யாவிட்டால் நாம் சுற்றுப்பயணிகளையும் வருமானத்தையும் இழந்து விடுவோம். அதே சமயம் நாட்டின் இயற்கை அழகும் உள்நாட்டு கலாசாரக் கூறுகளும் புறந்தள்ளப்படும்.
இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் கலாசாரத் துறைக்கும் பெரும் இழப்பை உண்டாக்கும் என அவர் சொன்னார்.
நாட்டின் தேசிய வியூகத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்த வேண்டும். இதன் வழி வெளிநாட்டினரை ஈர்க்கும் அதேவேளையில் மலேசியர்களும் உள்நாட்டில் சுற்றுலா மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.
2026 மலேசியாவுக்கு வருகை தாருங்கள் ஆண்டு நமக்கு முக்கியமான வாய்ப்பாகும். அதற்கான முன்னேற்பாடுகளை நாம் இப்போது முதல் மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா மேற்கொள்ளும் மலேசியர்களின் முதல் தேர்வாக உள்நாட்டிலுள்ள இடங்கள் விளங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.