புத்ராஜெயா, செப். 17 - சரவாக் மாநிலத்தில் 125 கோடி வெள்ளி செலவிலான ஹைபிரிட் சோலார் திட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்கை தொடர்ந்து செவிமடுப்பது மற்றும் தீர்ப்பு வழங்குவதிலிருந்து நீதிபதி டத்தோ முகமது ஜைனி மஸ்லான் விலகிக் கொள்ள வேண்டும் எனக் கோரி செய்திருந்த மேல் முறையீட்டில் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் தோல்வி கண்டார்.
நீதிபதியை விலகச் செய்வதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியாருக்கு தகுதி இல்லை என்ற அடிப்படையில் அவரின் முறையீட்டு மனுவை டத்தோஸ்ரீ அகமது ஜைடி இப்ராஹிம் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.
விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட சோலார் வழக்கு நீதிபதி டத்தோ முகமது ஜைனி மஸ்லான் முன்னிலையில் கடந்த ஈராண்டுகளாக நடைபெற்று வருகிறது. அப்போது மனுதாரர் ஒருமுறை கூட நீதிபதி வழக்கை விசாரிப்பதிலிருந்து விலக வேண்டும் என கோரி அவர் விண்ணப்பிக்கவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
நீதிபதி நீதியுடனும் சமநிலையுடனும் செயல்படுகிறார் என்பதை அக்காலக்கட்டத்தில் மனுதாரர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆகவே, இந்த விண்ணப்பம் எந்த தகுதியையும் கொண்டிருக்கவில்லை என்பதோடு பாகுபாடு காட்டப்படும் சாத்தியம் தொடர்பில் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.