சுங்கை லங்காட் ஆர்.டி.பி. திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும் - வட்டார மக்கள் கோரிக்கை

17 செப்டெம்பர் 2025, 4:57 AM
சுங்கை லங்காட் ஆர்.டி.பி. திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டும் - வட்டார மக்கள் கோரிக்கை

உலு லங்காட், செப். 17 - பல ஆண்டுகளாக நீடித்து வரும் வெள்ளம் குறித்த பீதியில் உழன்று வரும் டூசுன் துவா, கம்போங் பத்து 16 வட்டார மக்கள், கன மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் ஏற்படும், வெள்ள அபாயத்திலிருந்து மீள சுங்கை லங்காட் வெள்ளத் தடுப்புத் திட்டம் (ஆர்.டி.பி.) விரைவுபடுத்தப்பட வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

மழை பெய்யும் போதெல்லாம் மக்கள் வெள்ளம் குறித்த பதற்றத்தில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆர்.டி.பி. திட்டம் விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கிராமத் தலைவர் முகமது கடாபி அகமது ஹர்மான் கூறினார்.

நான் மட்டுமல்ல, கிராம மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள், காரணம் வெள்ளம் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனை வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. ஆகவே, இந்த கிராமத்தில் வெள்ளப் பிரச்சனை தீர்வதற்கு ஆர்.டி.பி. திட்டத்தின் அமலாக்கத்தை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீடியா சிலாங்கூர் நேற்று மேற்கொண்ட ஆய்வின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, ஆற்றின் ஓரம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தினால் வெள்ள அபாயத்தை தவிர்க்க இயலவில்லை என்று சுமார் 30 ஆண்டுகளாக இக்கிராமத்தில் குடியிருந்து வரும் டிஎச் டான் (வயது 57) கூறினார்.

தாழ்வான பகுதியிலும் ஆற்றோரத்திலும் அமைந்துள்ளதால் இங்கு வெள்ளத்தை தவிர்க்க இயலாது. இருப்பினும், அரசாங்கம் பணியை செய்து வருகிறது. அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

அங்கீகரிக்கப்பட்ட ஆர்.டி.பி. திட்டம் முழுமையாக அல்லாவிட்டாலும் ஓரளவுக்காகவது வெள்ளப் பிரச்சனையைத் தீர்க்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.

தாங்கள் வெள்ள அபாயத்தை பல ஆண்டுகளாக எதிர்நோக்கி வரும் நிலையில் லங்காட் ஆற்றை ஆழப்படுத்தும் மற்றும் அகலப்படுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 50 வயதான சித்தி ஆய்ஷா லிதார் தெரிவித்தார்.

கன மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உறக்கத்தை தொலைத்து விழித்திருக்கிறோம். வெள்ளத் தணிப்பு மற்றும் ஆற்றை ஆழப்படுத்தும் பணிகள் முற்றுப் பெற்றால் ஓரளவுக்காவது எங்களின் அச்சம் அகலும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.