மெர்சிங், செப் 17 - ஜோகூர் மெர்சிங், பெல்டா தெங்காரோவில் கார் ஒன்றை சோதனை செய்த போது சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டதாக நம்பப்படும் புலியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதன் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜோகூர் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையின் ஒத்துழைப்புடன் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சேமப்படை தெரிவித்திருக்கிறது.
புரோடுவா அல்சா வாகனத்தை சோதனை செய்தபோது புலியின் உடல் மற்றும் இரண்டு லட்சத்து 94,007 ரிங்கிட் மதிப்புள்ள மேலும் சில பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக சேமப்படை தலைவர் எஸ்ஏசி ரோஸ்லி முஹமட் யூசோஃப் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த விலங்கின் தலையில் ஆறு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு உதவும் வகையில், சிறப்பு அனுமதி இல்லாமல் வனவிலங்குகளை வைத்திருந்ததற்காக, 28 முதல் 49 வயதுடைய சந்தேக நபர்கள், 2010-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், செக்ஷன் 70, சட்டம் 716-இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பெர்னாமா