பட்டர்வெர்த், செப். 17 - இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட நாட்டின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்ய மலேசியர்கள் இன மற்றும் சமய தீவிரவாதப் போக்கிலிருந்து விலகியிருக்கும் அதேவேளையில் மக்களை பிளவுபடுத்தக்கூடிய தீவிரவாதப் போக்கையும் நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மத மற்றும் இனவெறி போக்கு நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும் என்று நேற்றிரவு மூவினங்களையும் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட 2025 மலேசிய தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடு என்ற முறையில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இன, சமய மற்றும் பிராந்திய ரீதியான வெறுப்புணர்வையும் சந்தேகப் போக்கையும் கைவிட வேண்டும்.
பிற இனங்களுடனான தீவிரவாதப் போக்கு மற்றும் மத வெறி அனுமதிக்கப்படாமலிருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடு என்ற முறையில் மலேசியா அனைத்து இனங்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதே சமயம், மலேசியாவின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்வு காண்பதையும் சிறப்பான நிர்வாகம் அமல்படுத்தப்படுவதையும் உறுதி செய்வது நாட்டுத் தலைவர்களுக்கு உள்ள பெரும் சவாலாகும் என அன்வார் கூறினார்.
சுதந்திரம் குறித்து பேசிய பிரதமர், சுதந்திரத்தின் உண்மையான பொருள் அந்நியர்களை அகற்றி உள்நாட்டினர் அந்த இடத்தில் நிரப்புவது அல்ல.
மாறாக, நீதியான, உயரிய பண்பு நலன்கள் கொண்ட மற்றும் மனிதாபிமானம் உள்ள நிர்வாக முறையின் உருவாக்கத்தை உறுதி செய்வது என்று அவர் தெளிவுபடுத்தினார்.