குவா மூசாங், செப்.17 - குவா மூசாங்-லோஜிங் சாலையின் 78வது கிலோமீட்டரில் போஸ் புரூக், கம்போங் ஜெக்ஜோக்கிற்கு அருகில் கடந்த 12ஆம் தேதி நிலம் உள்வாங்கியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அச்சாலை ஒற்றைத் தடமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள ஒரு தோட்ட நுழைவாயின் சாலையில் இந்த புதிய மண் அமிழ்வு கண்டறியப்பட்டதாக கிளந்தான் மாநில பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்) இயக்குனர் நிக் சோ யாக்கோப் தெரிவித்தார்.
அதே இடத்தில் 15 மீட்டர் நீளமும் சுமார் 0.1 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு புதிய பள்ளம் தோன்றியுள்ளதாகக் குவா முசாங் ஜே.கே.ஆர் அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குவா மூசாங்கிலிருந்து தானா திங்கி லோஜிங் வரையிலான சாலையின் ஒரு தடம் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
குவா மூசாங்-லோஜிங் சாலையில் ஒவ்வொரு திசையிலும் இரண்டு தடங்கள் இருந்தாலும் இரு திசைகளிலும் போக்குவரத்து இப்போது ஒரு தடத்தில் மட்டுமே உள்ளது என்று அவர் விளக்கினார்.
நிலத்தடி நீரோட்டம் மற்றும் அருகிலுள்ள வடிகாலில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது எனக் கூறிய அவர், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மண் உள்வாங்கும் அபாயம் அதிகரித்து வருகிறது என்றார்.
அந்தப் பகுதியை பொதுப்பணித்துறை கண்காணித்து வரும் வேளையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்தை தாங்கள் செயல்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சாலையைப் பயன்படுத்தும் போது வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு குவா மூசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ அறிவுறுத்தினார்.
இரவில் இந்தப் பகுதி இருளாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், விபத்துகளைத் தடுக்க வாகனமோட்டிகள் மெதுவாகச் செல்லுமாறு ஆலோசனை கூறினார்.
குவா மூசாங் - லோஜிங் சாலையில் மேலும் ஓர் இடத்தில் மண் உள்வாங்கியது
17 செப்டெம்பர் 2025, 1:51 AM


