கோலாலம்பூர், செப். 16- செமினியில் உள்ள கடை வீடொன்றில் நேற்று அதிகாலை பாதுகாவலர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு ஐந்து ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடப்பதற்கு முன்னர் முப்பத்தெட்டு வயதான அந்த பாதுகாவலர் நான்கு நண்பர்களுடன் பானம் அருந்திக் கொண்டிருந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.
அப்போது லோரி ஓட்டுநரான 37 வயதுடைய உள்நாட்டு ஆடவருக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. செமினியில் உள்ள வீடமைப்பு பகுதியின் திடலில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
கூர்மையான ஆயுதம் பட்டதால் அந்த லோரி ஓட்டுநருக்கு விரலில் காயம் ஏற்பட்டதாகவும் சம்பவத்திற்கு பின்னர் அனைவரும் அவ்விடத்தை விட்டு அகன்றதாகவும் அவர் சொன்னார்.
இச்சம்பவத்தினால் அதிருப்தியடைந்த அந்த லோரி ஓட்டுநர் அன்று விடியற்காலை 4.30 மணிக்கு செமினி வட்டாரத்தில் பாதுகாவலர் தங்கியுள்ள கடை வீட்டிற்கு தன் நண்பர்களுடன் சென்றுள்ளார் என அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
அந்த லோரி ஓட்டுநரின் நண்பர் பாதுகாவலரை கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் அவரின் கைகள் மற்றும் உடலில் பலத்தக் காயங்கள் ஏற்பட்டன. நண்பர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என நாஸ்ரோன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் 31 முதல் 37 வயது வரையிலான ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாராங் கத்தியும் கைபற்றப்பட்டது. அவர்கள் அனைவரையும் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்காக அவர்களை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி இன்று பெறப்படும் என்றார் அவர்.