ஷா ஆலம், செப். 16- இங்குள்ள பூலோ தெலோர் பூர்வக்குடி கிராமத்தில் உள்ள செராண்டோங் ஆற்றில் நேற்றிரவு
தனது நான்கு நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போனதாகக் கூறப்படும் பூர்வக்குடி ஆடவர் இன்று காலை தேடுதல் மற்றும் மீட்பு குழுவினரால் நீரில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஆற்றோரம் உள்ள ஒரு மரத்தில் சிக்கிய நிலையில் பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
நாற்பத்தேழு வயதான பாதிக்கப்பட்ட நபர் ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இறந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் சகோதரியிடமிருந்து நள்ளிரவு 12.45 மணிக்கு தமது தரப்புக்கு புகார் கிடைத்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிகாலை 2.36 மணிக்கு கோல குபு பாரு தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழுவும் நீர் மீட்புக் குழுவும் (பி.பி.டி.ஏ.) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன என அவர் சொன்னார்.
ஆற்றில் காணாமல்போன பூர்வக்குடி சடலமாக மீட்பு
16 செப்டெம்பர் 2025, 11:23 AM



