கோலாலம்பூர், செப். 16- நான்கு மாநிலங்களில் வெள்ளம் காரணமாக தற்காலிக நிவாரண மையங்கள் மற்றும் நிரந்தர நிவாரண மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை உயர்வு கண்டது.
சபா மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 658 குடும்பங்களைச் சேர்ந்த 2,468 பேர் பியூபோர்ட்டில் உள்ள 19 தற்காலிக நிவாரண மையங்களிலும் ஒரு நிரந்தர நிவாரண மையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு தெரிவித்தது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் பியூபோர்ட், பெனாம்பாங், புதாத்தான் ஆகிய மூன்று மாவட்டங்கள் வெள்ள அதிகரிப்பை எதிர் கொண்டு வரும் நிலையில் மேம்பாக்குட் மற்றும் பாப்பார் ஆகிய மாவட்டங்களில் நிலைமையில் மாற்றம் ஏதும் இல்லை என்று அந்த செயல்குழு அறிக்கை ஒன்றில் கூறியது.
பேராக் மாநிலத்தில் இன்று காலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேராக உயர்வு கண்டது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 48 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேராக இருந்தது.
இதனிடையே, சிலிம் ரிவரில் உள்ள சிலிம் ஆற்றில் நீர் மட்டம் வழக்கமான 23.5 மீட்டரைக் காட்டிலும் உயர்ந்து 265 மீட்டர் என்ற அபாயக் கட்டத்தில் உள்ளது என வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை தெரிவித்தது.
சிலாங்கூர் மாநிலத்தில் நேற்றிரவு 33 பேராக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 44 குடும்பங்களைச் சேர்ந்த 146 பேராக அதிகரித்துள்ளது. இங்கு மூன்று தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
உலு லங்காட், சுங்கை செராய் தேசிய பள்ளி, உலு சிலாங்கூர் மாவட்டத்திலுள்ள உலு பெர்ணம் சமூக மண்டபம் மற்றும் சுங்கை செலிசிக் கம்போங் செக்கோலா சமூக மண்டபம் ஆகியவற்றில் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நெகிரி செம்பிலானில் இன்று காலை இருபது குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர் ஜிம்மா லாமா, தேசிய பள்ளியில் உள்ள துயர்துடைப்பு மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர்.