டோஹா- செப். 16- காஸா விவகாரம் மற்றும் கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்பான நாட்டின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு வரும் அக்டோபர் மாதம் இங்கு நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடத்தவிருக்கும் சந்திப்பை மலேசியா பயன்படுத்திக் கொள்ளும்.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த பிராந்திய அமைப்பின் கூட்டத்தை பயன்படுத்தி பாலஸ்தீனம் மீதான ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் கடப்பாட்டை ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
காசா மற்றும் பாலஸ்தீனம் உள்ளிட்ட விவாகரங்களில் நீதியை நிலைநாட்டுவதற்கு ஏதுவாக மலேசியாவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளச் செய்வதற்கு அதிபர் டிரம்புடன் இந்த சந்திப்பை மலேசியா சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
இங்கு நேற்று நடைபெற்ற அரபு-இஸ்லாமிய நாடுகளின் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் மலேசிய ஊடகங்களுடன் நடத்திய சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இம்மாதம் 9ஆம் தேதி டோஹா மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அன்வாருக்கு கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி விடுத்த சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த மாநாட்டிற்கு மலேசியா வழங்கிய ஆதரவு, இஸ்ரேல் நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதிலும் கட்டாருக்கு முழு ஆதரவைத் தெரிவிப்பதிலும் இஸ்லாமிய அரபு நாடுகள் ஒன்றுபட்டு நிற்பதை புலப்படுத்தும் விதமாக உள்ளது என்று அன்வார் கூறினார்.
முன்னதாக இந்த மாநாட்டில் தேசிய அறிக்கையை வாசித்து அன்வார், பாலஸ்தீன மக்களுக்கு இன்னல்களை விளைவித்து, பாலஸ்தீனத்திற்கு எதிரான அராஜகங்கள் தண்டனைக்குரியது அவைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.