கோத்தா கினபாலு, செப்.16- நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்று காலை கோத்தா கினபாலு மற்றும் பாப்பாரில் ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவு சம்பவங்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இனானம், கொலம்போங்கில் உள்ள செண்டரகாசி கிராமத்தில் காலை 9.15 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் நான்கு சிறார்கள் உட்பட எழுவர் உயிரிழந்ததாக கோத்தா கினபாலு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி காசிம் மூடா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட மூன்று சிறார்களும் ஒரு சிறுமியும் அடங்குவர் எனக் கூறிய அவர், 25 முதல் 50 வயதுடைய
இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆடவரும் பாதிக்கப்பட்டனர் என்றார்.
இந்த சம்பவத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் தெய்வாதீனமாக உயிர்த் தப்பினர். அவர்களில் ஒருவருக்கு கால் முறிந்தது என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் தமது தரப்புக்கு காலை 10.02 மணிக்கு அழைப்பு வந்ததாக லிண்டாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்தின் தலைவரும் தீயணைப்பு மூத்த உதவியாளருமான அகஸ்டாவியா ஜோ குவாசி கூறினார்.
சம்பவ இடம் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள லிண்டாஸிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள லிண்டாஸ் மற்றும் துவாரன் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 24 உறுப்பினர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.
பாப்பார், கம்போங் மூக்கில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் வீடு சரிந்து அதிலிருந்த இரண்டு பேர் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 38 வயதுடைய பெண்ணும் 11 வயது சிறுவனும் அடங்குவர் என்று பாப்பார் தீயணைப்பு நிலையத் தலைவரும், உதவி தீயணைப்பு அதிகாரியுமான ரோஸ்லான் ஒஸ்மான் தெரிவித்தார்.
நிலச்சரிவில் ஒன்பது பேர் பலி- கோத்தா கினபாலு
16 செப்டெம்பர் 2025, 2:17 AM