ஷா ஆலம், செப். 16- பத்து கேவ்ஸ், தாமான் பிங்கிரான் , பிங்கிரான் அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் நிகழ்ந்த ஆறு வீடுகள் சம்பந்தப்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோம்பாக் நாடாளுமன்ற சேவை மையம் உடனடி உதவி வழங்கியுள்ளது.
தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட வேளையில் சம்பந்தப்பட்ட அனைத்து உதவிப் பணியாளர்களுக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று அதன் நடவடிக்கை அதிகாரி ஜமீல் அஸமான் ரசாக் தெரிவித்தார்.
உணவுப் பொருள் உதவியை துரிதப்படுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் தங்க முடிவெடுத்ததால் தற்காலிக நிவாரண மையம் திறக்கப்படவில்லை என அவர் சொன்னார்.
நாங்கள் இன்று பண உதவியும் வழங்கவிருக்கிறோம். இச்சம்பவத்தில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே சமயம், மற்ற இரண்டு குடும்பங்களின் வீடுகள் வசிக்கத் தகுதியானவையா என்பதைத் தீர்மானிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது என்று அவர் மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்டபோது கூறினார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்ற இரண்டு வீடுகள் காலியாக இருந்தன. காலை 11.00 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், தலா 35x25 சதுர அடி பரப்பளவு கொண்ட ஆறு வீடுகள் சேதமடைந்தன.
மதியம் 12.11 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வேளையில் இச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோம்பாக் எம்.பி. அலுவலகம் உதவி
16 செப்டெம்பர் 2025, 2:02 AM