புத்ராஜெயா, செப். 15 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) அண்மையில் நடத்திய ஓப் ரெந்தாஸ் சோதனையில் குடிநுழைவுத் துறை ஊழியர் ஒருவர் தனது மற்றும் அவரது குடும்பத்தினரின் கணக்குகளில் சுமார் 15 லட்சம் வெள்ளியை வைத்திருந்ததைக் கண்டுபிடித்தது.
சந்தேக நபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர்களில் உள்ள தாபோங் ஹாஜி கணக்கில் 10 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான தொகையும் அமானா சஹாம் பூமிபுத்ரா கணக்கில் 400,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையும் வைத்திருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரப்பூர்வ டிக்டாக் கணக்கு வழியாக வெளியிட்ட அறிக்கையில் எம்.ஏ.சி.சி. கூறியது.
அது தவிர, சந்தேக நபரிடமிருந்து 60,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளையும் 13,900 வெள்ளி ரொக்கத்தையும் எம்.ஏ.சி.சி. பறிமுதல் செய்தது.
அதே நடவடிக்கையில் கோலாலம்பூர் எம்.ஏ.சி.சி. பெண் ஊழியரிடமிருந்து 150,000 வெள்ளியை கைப்பற்றியது. வீட்டின் கூரையில் கண்டெடுக்கப்பட்ட 125,000 வெள்ளியும் இதில் அடங்கும். மேலும், 15,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளையும் அது பறிமுதல் செய்தது.
மற்றொரு பெண் சந்தேக நபர் 80,000 மதிப்புள்ள நகைகளையும் 41,470 வெள்ளி மற்றும் 13,300 பாட் ரொக்கத்தையும் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
மூன்று சந்தேக நபர்களும் கவுண்டர் செட்டிங் கும்பலுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டதாக நம்பப்படுகிறது என்று எம்.ஏ.சி.சி துணை ஆணையர் டத்தோஸ்ரீ அகமட் குசைரி யஹாயா கூறினார்.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வெளிநாட்டினர் இந்த நாட்டிற்குள் நுழைய அவர்கள் வசதி செய்து தந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
அமலாக்க அதிகாரியின் வசம் வெ.15 லட்சம் ரொக்கம், நகைகள் - எம்.ஏ.சி.சி. சோதனையில் பறிமுதல்
15 செப்டெம்பர் 2025, 9:43 AM