குவாந்தான், செப். 15 - ரவூப்பில் உள்ள ஒரு குவாரி ஒன்றில் பாறை சரிந்து விழுந்த சம்பவத்தில் புதையுண்டதாகக் கூறப்படும் மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநரைத் தேடி மீட்கும் நடவடிக்கை மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில் தேடுதல் பகுதி மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 7.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை இன்று காலை 7.50 மணியளவில் மீண்டும் தொடங்கப்பட்டதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மற்றும் மீட்புப் பிரிவு உதவி இயக்குநர் முகமட் சலாவுடின் இசா கூறினார்.
இன்றைய நடவடிக்கையில் டென்டி என்ற மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டதோடு கட்டமைப்பு அசைவுகளைக் கண்டறியும் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு மலேசிய சிவில் பாதுகாப்புப் படையின் (ஏபிஎம்) உதவியும் நாடப்பட்டதாக அவர் கூறினார்.
பெரிய பாறைகள், மண் நகர்வு மற்றும் பாறைகளை அகற்றுவது போன்றவை மீட்புக் குழு எதிர்நோக்கும் முக்கிய சவாலாக உள்ளன. இது தேடுதல் நடவடிக்கையின் போது நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கிறது என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இன்று காலை தொடங்கப்பட்ட மீட்பு நடவடிக்கையில் தீயணைப்புத் துறை, அரச மலேசிய போலீஸ் படை மற்றும் ஏபிஎம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 12.50 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், 30 வயதான முகமது ஃபாஸ்ருல் இல்லாஹி அப்துல் ரஹ்மான் என்ற மண்வாரி இயந்திர ஓட்டுநர் திடீரென விழுந்த பாறைகளால் நசுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாறையினால் நசுக்கப்படுவதற்கு முன்பு அவர் மண்வாரி இயந்திரத்திலிருந்து குதித்து தப்ப முயன்றதாகக் நம்பப்படுகிறது. இச்சம்பவத்தில் மூன்று வெளிநாட்டு தொழிலாளர்களும் காயமடைந்தனர்.
பாறை சரிந்த சம்பவம்- புதையுண்ட மண்வாரி இயந்திர ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்
15 செப்டெம்பர் 2025, 9:08 AM