டோஹா, செப்.15 - ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து டோஹாவில் இஸ்ரேல் அண்மையில் நடத்திய வான்வழித் தாக்குதலைக் கண்டித்தும் காஸாவில் நிகழ்ந்து வரும் மனிதாபிமான துயரங்களை எடுத்துரைத்தும் அரபு-இஸ்லாமிய சிறப்பு உச்சநிலை மாநாட்டில் மலேசியாவின் தேசிய அறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்க உள்ளார்.
இன்று 15ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 6.00 மணிக்கு (மலேசிய நேரப்படி இரவு 11.00 மணி) அந்த அன்வார் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் இரக்கமற்ற ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் அதே வேளையில், கத்தாருடனான மலேசியாவின் அசைக்க முடியாத ஒருமைப்பாட்டையும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அதன் உறுதியான நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்துவார்.
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியின் அழைப்பின் பேரில் பிரதமர் இந்த சிறப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
நேற்றிரவு உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணிக்கு (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு) ஹமாத் அனைத்துலக விமான அன்வார் நிலையத்தில் தரையிறங்கினார்.
விமான நிலையத்தில் அவருக்கு கத்தாரின் அமிரி காவலர்களால் அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது. கத்தாரின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான இணையமைச்சருமான ஷேக் சௌத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி அவரை வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
ஈரான் அதிபர் மசூட் பெஷேஷ்கியன், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி மற்றும் பாலஸ்தீன அதிபர் மாமூட் அப்பாஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்ச நிலை மாநாட்டின் ஒரு பகுதியாக அன்வார் பல இஸ்லாமியத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்த உள்ளார்.
அரபு-இஸ்லாமிய சிறப்பு மாநாட்டில் பிரதமர் தேசிய அறிக்கையை வழங்குவார்
15 செப்டெம்பர் 2025, 8:56 AM