சிரம்பான், செப். 15 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 33 பேரை தங்க வைப்பதற்காக போர்ட்டிக்சன், கம்போங் ஜிமா லாமா சமூக மண்டபத்தில் இன்று காலை 10.40 மணிக்கு தற்காலிக நிவாரண மையம் ஒன்று திறக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் லுக்குட், கம்போங் ஜிமா லாமாவைச் சேர்ந்த 18 பெரியவர்கள் மற்றும் 15 சிறார்களும் அடங்குவர் என்று
போர்ட்டிக்சன் மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி கேப்டன் முகமட் ரிட்சுவான் முகமட் புனிரான் கூறினார்.
நேற்று நள்ளிரவு தொடங்கி சுமார் ஐந்து மணி நேரம் கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. நிவாரண மையத்திற்கு வரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும் தற்போது வானிலை தெளிவாக உள்ளதால் சில மணி நேரத்தில் வெள்ளம் முற்றிலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் சொன்னார்.
ஆறு மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு அருகில் அமைந்திருப்பதால் இந்த கிராமம்
அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படும் இடமாக உள்ளது. வெள்ளம் காரணமாக சொத்துகளுக்கு சேதம் ஏற்படவில்லை என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
போர்ட்டிக்சனில் வெள்ளம் - 33 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்
15 செப்டெம்பர் 2025, 6:50 AM