கோத்த பாரு, செப். 15 - இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி செப்டம்பர் 12 வரை மலேசியா-தாய்லாந்து எல்லையில் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்குரிய கடத்தலுக்கு எதிரான 108 சோதனைகளில் 13 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 338.3 டன் சியாம் அரிசியை பொது நடவடிக்கை குழுவின் (பி.ஜி.ஏ.) தென்கிழக்கு படைப்பிரிவு பொது பறிமுதல் செய்தது.
இந்நடவடிக்கையில் 13 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 329.9 டன் வெள்ளை அரிசியும் 59,600 வெள்ளி மதிப்புள்ள பூலுட் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டதாக பி.ஜி.ஏ.தென்கிழக்கு படைப்பிரிவு தளபதி டத்தோ நிக் ரோஸ் அஜான் நிக் அப்துல் ஹமீட் கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது அண்டை நாட்டிலிருந்து அரிசியைக் கடத்த முயன்ற குற்றத்திற்காக 41 ஆடவர்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து வழக்குகளும் 1967 ஆம் ஆண்டின் சுங்க சட்டம் மற்றும் 1961 ஆம் ஆண்டின் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றன என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
உள்ளூர் சந்தை மற்றும் மக்களின் நலனைப் பாதிக்கக்கூடிய அரிசி கடத்தலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எல்லையில் தீவிரப்படுத்துவதற்கு பி.ஜி.ஏ. உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.
நாட்டின் எல்லைகள் எப்போதும் கடத்தல் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பி.ஜி.ஏ. மற்ற அமலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
பி ஜி ஏ. சோதனையில் வெ.13.6 லட்சம் மதிப்புள்ள 338.3 டன் அரிசி கடத்தல் முயற்சி முறியடிப்பு
15 செப்டெம்பர் 2025, 5:47 AM