ad

திருமணம் மற்றும் பிள்ளைகளை பெற்று கொள்ளும் வாழ்க்கை முறை மலேசியாவில் குறைந்து வருகிறது

15 செப்டெம்பர் 2025, 4:56 AM
திருமணம் மற்றும் பிள்ளைகளை பெற்று கொள்ளும் வாழ்க்கை முறை மலேசியாவில் குறைந்து வருகிறது

கோலாலம்பூர், செப் 15 — முன்பு காலத்தில் வாழ்க்கையின் இயல்பான ஒன்றாக கருதப்பட்ட திருமணம் மற்றும் பிள்ளைகளை பெற்று கொள்ளும் வாழ்க்கை முறை, இன்று மலேசியாவில் குறைந்து வருகிறது.

உயரும் வாழ்க்கைச் செலவுகள், வாழ்கை முறை மற்றும் மாறிவரும் சமூக மதிப்பீடுகள் ஆகியவை பல இளம் தம்பதிகளை குழந்தைப் பெற்று கொள்வதை தள்ளிப்போட தூண்டுகின்றன. சிலர் முழுமையாக குழந்தை வேண்டுமா என்பதையே மறுபரிசீலனை செய்கின்றனர்.

மலேசிய சீனர் மற்றும் இந்திய தம்பதிகள் ஆகியோர் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டிகளில், அவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் மகிழ்ச்சியும் சிரமங்களும் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதைக் கூறுகிறார்கள்.

அவர்கள் கூறும் அனுபவங்கள் காதல், பொருளாதார உண்மைகள், மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுக்கிடையே உள்ள நுண்ணிய சமநிலையை வெளிப்படுத்துகின்றன. இது அனைத்து சமூகத்திற்கும் பொருந்தக்கூடிய பிறப்புத் தொகை குறைவுப் போக்கை வலியுறுத்துகின்றது.

“நிதிச் சுமை மிக முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது. நகரத்தில் வாழ்வதற்கு அதிக பணம் செலவாகிறது. எனவே, எங்கள் போன்ற பல தம்பதிகள், குடும்பத்தைத் தொடங்குவதற்கு முன் முதலில் சேமிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது” என்று ஸ்ரீ ராம் கணேசன் (32) கூறுகிறார். திருமணம் செய்தே ஒரு வருடம் ஆனவர், தற்போது குழந்தைக்கான திட்டம் இல்லை என்றார்.

வேலை சார்ந்த ஆசைகள் மற்றும் நீண்ட வேலை நேரமும், தம்பதிகள் ஒருவருக்கொருவர் நேரம் செலவிட முடியாத நிலைக்குத் தள்ளுகிறது என்றார் அவர்.

மலேசிய புள்ளிவிவரத் துறையின் ‘Population Projection 2020-2060’ அறிக்கையின் படி, மலேசியாவின் மக்கள் தொகை 2059ஆம் ஆண்டில் 42.38 மில்லியனாக உச்சத்திற்கு செல்வதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும், வளர்ச்சி விகிதம் 2020இல் 1.7% இருந்த நிலையில், 2060இல் 0.1% ஆக கடுமையாக குறையும்.

இந்தக் காலப்பகுதியில், பூமிபுத்ரா சமூகத்தின் பங்கு 2020இல் 69.4% இருந்து 2060இல் 79.4% ஆக அதிகரிக்கும். அதே நேரத்தில், சீனர் சமூகத்தின் பங்கு 23.2% இல் இருந்து 14.8% ஆகவும், இந்தியர் பங்கு 6.7% இல் இருந்து 4.7% ஆகவும் குறையும்.

இதே போக்கு சிலாங்கூர் மாநிலத்திலும் காணப்படுகிறது. அங்கு பூமிபுத்ரா பங்கு 60.6% (2020) → 69.9% (2060) ஆக அதிகரிக்கிறது; சீனர் மற்றும் இந்தியர் பங்குகள் முறையே 27.3% → 20.3% மற்றும் 11.3% → 8.6% ஆக குறைகின்றன.

சென் வேய் ஃபூங் (37) மற்றும் வோங் சியாவ் யின் (37) தம்பதினருக்கு நால்வராக உள்ள குடும்ப வாழ்க்கை உவகை அளிப்பதுடன், மிகுந்த பரபரப்புடனும் இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் உயரும் வாழ்க்கை மற்றும் கல்விச் செலவுகளால் மூன்றாவது பிள்ளை பெற்று கொள்ளும் எண்ணமே அவர்கள் மனதில் இல்லை,

இருவரும் 2017இல் திருமணம் செய்துகொண்டனர். முதல் குழந்தையாக ஓர் ஆண் பிள்ளை பிறந்தது. பின், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மகளும் பிறந்ததால் அவர்கள் குடும்பம் பூரணமானதாக ஆனது.

“பிள்ளைகள் பெற்று கொள்வதில் மனநிலையிலும் உணர்ச்சியிலும் தயார் இல்லாமல் இருக்கும் நிலையில், அது எல்லாருக்கும் வேதனையையே கொடுக்கும். வறுமை திருமணத்தில் உண்டாக்கும் அழுத்தம் என்பது ஒரு பழமொழி மட்டுமல்ல; அது உண்மை,” என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், ஏங் ஸீ வை (35) மற்றும் கோ ஹான் மாங் (34) ஆகியோருக்கும், ஏழு வயது மகளும், ஆறு மாதக் குழந்தையான மகனும் உள்ளனர். மேலும் பிள்ளை பெற திட்டமில்லை என்றனர்.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகள், அவர்களின் முடிவில் முக்கிய காரணமாக இருந்தன. அவர்கள் இரண்டு பிள்ளைகளை வளர்ப்பதில் முழு அன்பும் மற்றும் பொறுப்பும் செலுத்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

“நிதிச் சுமை உண்மையாகவே உள்ளது. நாங்கள் தேவையானவற்றிற்கே செலவிடுகிறோம். இன்றைய இளைஞர்கள் குழந்தை பெற விரும்பாததற்கு காரணம் வாழ்க்கைச் சுமை மற்றும் அதிகம் செலவும் தான் என்றனர். ஆனால் எங்களுக்காக, எங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியை தடை செய்ய முடியாத,` என்று ஏங் கூறினார்.

சரியான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பதே பெரிய சவாலாக உள்ளது என தசிநவேல் சுப்பையா (35), சூரிய ஆற்றல் திட்ட பொறியாளர் தெரிவித்தார்.

உயரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக, திருமணம் செய்துகொள்வதும், குடும்பம் தொடங்குவதும் இன்னும் சிக்கலான முடிவுகளாக மாறியுள்ளன.

அதனால் தான், அழுத்தத்துக்குள் திருமணம் செய்யும் பாரம்பரியத்திற்குப் பதிலாக காத்திருக்க முடிவு செய்துள்ளார் அவர்.

“முந்தைய காலங்களில், பல இந்தியர் தம்பதிகள் குடும்ப அழுத்தத்தால் இளவயதில் திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால் இன்று அது வழக்கமல்ல.

திருமணம் செய்து ஒரு குடும்பத்தை உருவாக்க, மலிவான குழந்தை பராமரிப்பு, சிறந்த பெற்றோர் விடுப்பு, மற்றும் நெகிழ்வான வேலை நேரம் போன்ற கொள்கைகள் அவசியம் என தசிநவேல் வலியுறுத்தினார்.

“அரசு இளம் குடும்பங்களுக்கு, குறிப்பாக சிறுபான்மை சமூகங்களுக்கான ஊக்கத்தையும் வேலைவாய்ப்பு ஆதரவும் வழங்கினால், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முடியும்,” என அவர் கூறினார்.

அவரது கருத்தை ஒப்புகொண்டு, அரசு நெகிழ்வான வேலை கொள்கைகள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைக்கும் நிதி உதவித் திட்டங்களை தொடங்க வேண்டும் எனக் ஸ்ரீ ராம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.