ad

அமெரிக்க வரி சவால்களுக்கு மத்தியிலும் சிப்ஸ் மாநாடு முதலீட்டாளர்களை ஈர்க்கும் - இங் ஸீ  ஹான்

15 செப்டெம்பர் 2025, 4:30 AM
அமெரிக்க வரி சவால்களுக்கு மத்தியிலும் சிப்ஸ் மாநாடு முதலீட்டாளர்களை ஈர்க்கும் - இங் ஸீ  ஹான்

கோலாலம்பூர், செப். 15 -  அமெரிக்கா விதித்துள்ள   புதிய வரிகளை  தொடர்ந்து 2025 சிலாங்கூர் அனைத்துலக  வர்த்தக உச்சநிலை மாநாடு (சிப்ஸ்) முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான  சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்யப்படும் முதலீடுகள் உண்மையிலேயே தரமானவை என்பதை உறுதி செய்வதற்காக நிறுவனங்கள்
பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை கையாள்வதற்கு இந்த நடவடிக்கை வழிவகுத்துள்ளது என்று முதலீட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  இங் ஸீ ஹான் கூறினார்.

சிப்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்படும் முன்னெடுப்புகளில்  ஒன்றாகும்.  ஏனெனில்,  சிலாங்கூர் தரமான முதலீட்டாளர்களை ஈர்க்க இது உதவ முடியும்.  இருப்பினும், சில பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்படுவதால் பரிவர்த்தனை மதிப்பை உறுதிப்படுத்த முடியாது.

வரி விதிக்கப்பட்ட பிறகு ஏற்படும் மேம்பாடுகளுக்காக நிறுவனங்கள் காத்திருக்கின்றன. ஆனால் இந்த அணுகுமுறை அதிக காலம் நீடிக்காது. ஏனெனில் அவர்கள்  தங்கள் தொழிலைத் தொடர்ந்துதான் ஆக வேண்டும் என்று அவர் கூறினார்.

நேற்றிரவு  இங்குள்ள வாவாசன் பொழுதுபோக்கு பூங்காவில் கின்ராரா இளைஞர் விழாவைத் தொடக்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

மலேசியாவின் பொருளாதார மையமாகவும் ஆசியானுக்கான நுழைவாயிலாகவும் விளங்கும்  சிலாங்கூரின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சிப்ஸ் 2025 உச்சநிலை மாநாடு வரும்  அக்டோபர் 8 முதல் 11 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும்.

இவ்வாண்டு நிகழ்வில் 50,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.  சிலாங்கூர் அனைத்துலக பராமரிப்பு உச்சநிலை மாநாடு மற்றும் சிலாங்கூர் விமான கண்காட்சி என்று முன்னர் அழைக்கப்பட்ட சிலாங்கூர் விண்வெளி உச்சிநிலை மாநாடு (எஸா.ஏ.எஸ்.) ஆகிய இரண்டு புதிய பிரிவுகள் இம்மாநாட்டில்  இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, சிலாங்கூர் அனைத்துலக உணவு மற்றும் பான கண்காட்சி, சிலாங்கூர் முதலீடு மற்றும் தொழில்துறை பூங்கா கண்காட்சி, சிலாங்கூர் ஆசியான் வணிக மாநாடு மற்றும் சிலாங்கூர் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் விவேக நகர மாநாடு போன்ற பல முக்கிய நிகழ்வுகளையும் சிப்ஸ் உள்ளடக்கியுள்ளது.

கடந்தாண்டு இரண்டு தொடர்களாக நடத்தப்பட்ட  (ஜூலை மற்றும் அக்டோபர்) சிப்ஸ் மாநாட்டில்  1,386 கோடி வெள்ளி  பரிவர்த்தனை மதிப்பு பதிவு செய்யப்பட்டது  கடந்த  2023ஆம் ஆண்டில் பதிவான 612 கோடி வெள்ளி பரிவர்த்தனையை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.