நிபோங் தெபால், செப் 15 — மெட்ரிகுலேஷன் முறையை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஏனெனில் இந்தத் திட்டமும் , எஸ்டிபிம் தேர்வும் அங்கீகரிக்கப்பட்டு பொதுப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
இந்த இரண்டு முறைகளும் நீண்ட காலமாக தேசிய கல்வி கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. மேலும், மாணவர்களுக்கு உயர்கல்விக்கான அணுகலை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
“மெட்ரிகுலேஷன் ரத்து குறித்த விவாதங்களை நான் கவனித்து வருகிறேன். ஆனால், இந்தப் பிரச்சனையை உச்சநிலைக்குக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு நான் அறிவுறுத்துகிறேன். எஸ்டிபிஎம் மற்றும் மெட்ரிகுலேஷன் இரண்டும் நமது கல்வி முறையில் நீண்ட காலமாக நிறுவப்பட்டுள்ளன.
“ஒவ்வொன்றுக்கும் அதன் சொந்த தனித்தன்மையை கொண்டுள்ளன. மேலும், பொதுப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. அதே நேரத்தில், அவ்வப்போது பெறப்படும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அவற்றை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முழுமையாக உறுதிபூண்டுள்ளது, ”என்று அவர் கூறினார்.
“எந்தப் பயனையும் தராத பிரச்சனைகளால் நாம் பிரிக்கப்படக்கூடாது. நமது குழந்தைகளுக்கு உயர்கல்விக்கான அணுகலை வழங்குவதிலும் இரண்டும் முறைகளும் இன்றியமையாதவை” என்று ஃபட்லினா கூறினார்.