கோலாலம்பூர், செப். 15 - இம்மாதம் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஓப் ரெந்தாஸ் சோதனையின்போது 'கவுண்டர் செட்டிங்' நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கும்பலைச் சேர்ந்த ஆறு நபர்களிடமிருந்து சிலாங்கூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) பல்வேறு மதிப்புமிக்க பொருட்களுடன் 3.2 கிலோ நகைகளையும் பறிமுதல் செய்தது.
அந்த ஆறு பேரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஆபரண நகைகள் தவிர, சுமார் 400,000 வெள்ளி மதிப்புள்ள 75 தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக எம்.ஏ.சி.சி. துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) டத்தோஸ்ரீ அகமது குசைரி யஹாயா தெரிவித்தார்.
இவை தவிர ஒரு நிலம், ஒரு வீடு, பல சொகுசு வாகனங்கள், 20,000 வெள்ளி ரொக்கம், பல்வேறு வகையான கைப்பைகள் மற்றும் 100,000 மதிப்புள்ள 20 விலை மதிப்புமிக்க கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அந்தப் பொருட்களின் உரிமையாளர்களில் ஐந்து பேர் விமான நிலைய முகப்பிடங்களில் பணியில் இருந்த மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் என்றும் மற்றவர் ஒரு சாதாரண பிரஜை என்றும் அகமது குசைரி குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி. நடத்திய இந்த சோதனையின் மூலம் அக்கும்பலுடன் தொடர்புடைய 70 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 33 லட்சம் வெள்ளியாக உயர்ந்துள்ளது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்நிய நாட்டினர் நாட்டிற்குள் நுழைவதை எளிதாக்குவதற்கு உதவியதற்கு கைமாறாக ஐந்து குடி நுழைவு அதிகாரிகளும் முகவர்களிடமிருந்து பணம் பெற்றதாக நம்பப்படுகிறது.
இவ்வழக்கு 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 17ஏ பிரிவின் கீழ் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஊழலின் மூலம் கிடைத்த வருமானம் என்று சந்தேகிக்கப்படும் பணத்தில் அமலாக்க அதிகாரிகளான கணவன்-மனைவி ஒரு நகைக் கடையைத் திறந்துள்ளதை எம்.ஏ.சி.சி. கண்டுபிடித்ததாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அமலாக்க அதிகாரிகள் உள்பட அறுவர் கைது- வெ.16 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
15 செப்டெம்பர் 2025, 1:50 AM