ஷா ஆஷம், செப். 14- கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஷா ஆலம் ரோட்டரி கிளப்புடன் இணைந்து குடியிருப்பாளர்களுக்கு "இதயத்தை பாதுகாப்போம் 5.0” எனும் மருத்துவ பரிசோதனை இயக்கத்தை நேற்று நடத்தியது.

தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள எம்.ஜே. மெடிக் கிளினிக்கில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் இ.சி.ஜி. சோதனை மற்றும் இரத்த பரிசோதனைகளை உள்ளடக்கிய இலவச இதய சுகாதார பரிசோதனைகள் நடத்தப்பட்டன
இதய பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த ஆரம்பகால விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த முயற்சியின் மூலம் குடியிருப்பாளர்கள் அடிப்படை பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதார நிபுணர்களிடமிருந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் வாய்ப்பு கிட்டியதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் கூறினார்.
சமூகம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு சுகாதாரம் ஒரு முக்கிய அடித்தளம் என்பதை வலியுறுத்திய அவர், சிலாங்கூர் மக்கள், குறிப்பாக கோத்தா கெமுனிங் குடியிருப்பாளர்கள் ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை உறுதி செய்வதில் தாம் அதிக அக்கறையுடன் இருப்பதாகக் கூறினார்.
இது போன்ற பரிசோதனைத் திட்டங்கள் மிகவும் நோய்த் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அங்கமாகும். இதய கோளாறு பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. நல்ல ஆரோக்கியம் நம்மை வேலை செய்வதற்கு படிப்பதற்கு மற்றும் மிகவும் திறம்பட சேவை செய்வதற்கு வாய்ப்பளிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
இச்சோதனையின் போது நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டவர்களுக்கு "சிலாங்கூர் மாநில இதயத் திட்டத்தின்" உதவியுடன் சி.டி. ஸ்கேன் மற்றும் ஆஞ்சியோகிராம் செய்ய பரிந்துரைக்கப்படும்.
கடந்த ஏப்ரல் மாதம் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 35 பேர் பங்கு கொண்டனர். அவர்களில் 10 பேர் சன்வே மருத்துவ மையம் மற்றும் சி.வி.எஸ்.சில் தொடர் சிகிச்சையைப் பெற்றனர். சிகிச்சை செலவில் 5,000 வெள்ளி செலவிலான சி.டி.ஸ்கேன் சோதனை, 50,000 வெள்ளி செலவிலான
ஆஞ்சியோகிராம் மற்றும் 10,000 வெள்ளி செலவில் தனியார் மருத்துவமனையில் பின்தொடர் சிகிச்சை ஆகியவையும் இதில் அடங்கும்.
மக்கள் இப்போது தங்கள் ஆரோக்கியத்தை தவறவிடும் அளவுக்கு பரபரப்பான வாழ்க்கை முறையை எதிர்கொள்கின்றனர். அத்தகைய முயற்சிகளை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.