குவாந்தான், செப். 14 -- ரவுப், சுங்கை ருவான் உலு காலியில் உள்ள ஒரு குவாரியில் நேற்று பாறை ஒன்று விழுந்ததில் ஒரு தொழிலாளி அதில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப் பட்டது.
கிளந்தான், தானா மேராவைச் சேர்ந்த முகமது பாஸ்ருல் இல்லாஹி அப்துல் ரஹ்மான் (வயது 30) என்பவர் இசாசம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக ரவுப் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமட் ஷஹாரில் அப்துல் ரஹ்மான் கூறினார்.
மதியம் 12.50 மணியளவில் மண்வாரி இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அருகிலுள்ள மலைப்பகுதியில் இருந்து விழுந்த பாறைகளில் அவர் சிக்குண்டார்.
பாறை சரிவதைக் கண்ட பாதிக்கப்பட்ட நபர் தாம் இயக்கி வந்த மண்வாரி இயந்திரத்திலிருந்து வெளியே குதித்ததாக நம்பப்படுகிறது. எனினும் அந்த பாறை அவர் மீது விழுந்து மூடியது. பாதிக்கப்பட்ட பகுதி 300 மீட்டர் சுற்றளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது அதே நேரத்தில் ஆழம் இன்னும் தெரியவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அங்கிருந்த மற்ற மூன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். அவர்கள் தற்போது ரவூப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் பல நிறுவனங்களை உள்ளடக்கிய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. எனினும், நேற்று தளத்தில் மண் நகர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து மீட்புக் குழு சிரமங்களை எதிர்கொண்டது.
இருள் காரணமாக இரவு 7.30 மணிக்கு நிறுத்தப்பட்ட மீட்புப் பணி இன்று தொடங்கும் வேளையில் அப்பணிக்கு உதவ கே9
மோப்ப நாய்ப் பிரிவின் உதவியை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நாடியுள்ளது என்று ஷாரில் கூறினார்.