அலோர்ஸ்டார், செப். 14 - பள்ளி விடுமுறை மற்றும் நீண்ட பொது விடுமுறை காரணமாக தாய்லாந்துக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு, சுங்க, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் வழக்கத்திற்கு மாறாக நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய நெரிசல் செப்டம்பர் 21 வரை தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக புக்கிட் காயு ஹித்தாம் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (ஏ.கே.பி.எஸ்.) தளபதி எஸ்.ஏ.சி. முகமது நசாருடின் எம். நாசீர் கூறினார்.
புக்கிட் காயு ஹீத்தாம் சுங்க வளாகத்தில் உள்ள தனியார் வாகன வெளியேறும் பாதையில் வழக்கத்திற்கு மாறாக நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை மற்றும் மலேசியா தின பொது விடுமுறை காரணமாக அண்டை நாடான தாய்லாந்திற்கு செல்லும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
நேற்று சுங்க வளாகத்திற்குள் 21,971 பேர் நுழைந்து வெளியேறியதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதில், மலேசியர், தாய், இந்தோனேசியர், சீனர்கள் மற்றும் இந்தியர் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4,941 பேரும் அடங்குவர். அதே நேரத்தில் 17,030 நபர்கள் தாய்லாந்திற்கு புறப்பட்டுச் சென்றனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நெரிசலை சமாளிக்க விரைவு பதிலளிப்பு குழுவை ஏ.கே.பி எஸ். செயல்படுத்தி அந்த நுழைவாயில் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கில் கூடுதல் அதிகாரிகளை நியமித்துள்ளது.
அதிகாலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை செயல்படும் இந்த சோதனைச் சாவடி கடுமையாகக் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஏ.கே.பி.எஸ். காவல்துறை மற்றும் பிற அமலாக்க நிறுவனங்களுடன் ஒத்துழைத்து வருவதாக நசாருடின் கூறினார்.
ஒட்டுமொத்த நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் களத்தில் தொடர்ச்சியான நெருக்கமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பெருநாள் விடுமுறை எல்லை சாவடிகளில் நெரிசல்
14 செப்டெம்பர் 2025, 6:59 AM