ad

அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க மாநில அரசு வெ.44 லட்சம் ஒதுக்கீடு

14 செப்டெம்பர் 2025, 4:19 AM
அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க மாநில அரசு வெ.44 லட்சம் ஒதுக்கீடு

அம்பாங் ஜெயா, செப். 14- இவ்வாண்டு அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைப்பதற்காக மொத்தம் 44 லட்சத்து 9 ஆயிரத்து 170 வெள்ளியை ஒதுக்கியதன் மூலம் அடுக்குமாடி  குடியிருப்புகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தனது கடப்பாட்டை மாநில அரசு தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

குடியிருப்பாளர்கள் மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையில் வசிப்பதை  உறுதி செய்வதற்காக மின்தூக்கி, தண்ணீர் தொட்டிகள், தடுப்புகள்  மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை பழுதுபார்க்கும் பணிகள் இந்த ஒதுக்கீட்டின் வழி மேற்கொள்ளப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான  ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

நாற்பது லட்சம் வெள்ளிக்கும்   அதிகமான தொகை என்பது சிறிய தொகை அல்ல.
அடுக்குமாடி  வீடுகளில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கு குறிப்பாக  பட்டா பிரச்சினை  இன்னும் தீர்க்கப்படாத பழைய குடியிருப்புகளுக்கு தொடர்ந்து உதவி வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்.


ஒவ்வொரு ஆண்டும் இந்த நோக்கத்திற்காக நாங்கள் தொடர்ந்து நிதி ஒதுக்குவோம் என்று அவர் கூறினார்.

லெம்பா ஜெயா நகராண்மைக் கழக மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர் மாநில அடுக்குமாடி குடிமிருப்பு  சமூக ரேவாங் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அம்பாங், கோம்பாக் மற்றும் பல பகுதிகளில் இன்னும் பல பழைய திட்டங்கள்  பட்டா உரிமையைப் பெறாததால் அத்தகைய  அடுக்கு மாடி குடியிருப்பு  பிரச்சினைக்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை  அமைச்சு,  சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்துடைமை  நிறுவனம் மற்றும்  மூலம் மத்திய அரசின் ஒத்துழைப்பால் இந்த முயற்சி வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

நாங்கள் பெற வேண்டிய உதவியை இழக்காமலிருப்பதை  உறுதி செய்ய மத்திய அரசு எப்போதும் கண்காணிக்கும். அதே வேளையில் மாநில அரசு தொடர்ந்து ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து வரும்  என்று அவர் சொன்னார்.

அதே நிகழ்வில் பேசிய லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சைட் அகமது அப்துல் ரஹ்மான் அல்ஹடாட், நகர்ப்புற சமூகத்தின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் கூடிய மலிவு விலையில் வீடுகளைக் கட்டுவதற்கான மாநில அரசின் கடப்பாட்டை வலியுறுத்தினார்.

இதுவரை, 76,000 க்கும் மேற்பட்ட மலிவு விலை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு  தயாராக உள்ளன. 2028 ஆம் ஆண்டுக்குள் 200,000 வீடுகளை உருவாக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். நாடு முழுவதும் பத்து  லட்சம் மலிவு விலை வீடுகளை வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கிற்கு  இது ஏற்ப உள்ளது என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.