ஷா ஆலம், செப். 14- தெராஸ் ஜெர்னாங், டேசா செந்தோசா வட்டாரத்தில் உரிமம் இன்றி செயல்பட்ட மற்றும் பொது இடங்களில் தடைகளை ஏற்படுத்திய வியாபாரிகளுக்கு எதிராக சிப்பாங் நகராண்மைக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டது.
மத்திய மண்டல அங்காடி வர்த்தகப் பிரிவின் தலைமையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிப்பாங் நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் கூறியது.
முறையான உரிமம் இன்றி வர்த்தகம் புரிந்தது மற்றும் அதிகாரிகளின் அனுமதியின்றி பொது இடங்களில் வர்த்தகப் பொருட்களை வைத்து இடையூறை ஏற்படுத்தியது போன்ற குற்றங்களின் மீது இச்சோதனையில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின் விளைவாக நான்கு குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன. அதே நேரத்தில் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக எட்டு பறிமுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை 1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் 46(1)(டி) பிரிவின் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொது இடத்தில் வணிகப் பொருட்களை வைப்பது, பொது போக்குவரத்து மற்றும் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் குற்றமாகும் என நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் எந்தவொரு வணிகத்தையும் மேற்கொள்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட வணிகர்கள் செல்லுபடியாகும் உரிமம் மற்றும் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் சிப்பாங் நகராண்மைக் வலியுறுத்தியது.
இந்த நடவடிக்கை வணிகம் சட்டப்பூர்வமாக நடப்பதை உறுதி செய்வதற்கு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலின் தூய்மை, பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கும் முக்கியமானது.
வரும் காலங்களில் அமலாக்க நடவடிக்கைகளுக்கு உள்ளாவதை தடுக்க நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்கி பொறுப்புணர்வுடன் செயல்படும்படி அனைத்து வர்த்தகர்களையும் நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டது.
அனுமதியின்றி வர்த்தகம் - வணிகர்கள் மீது நடவடிக்கை
14 செப்டெம்பர் 2025, 4:05 AM