கோலாலம்பூர், செப். 14- குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவு தொடர்பில் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனத்திடம் புகார் தருவோர் 5.00 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை டச் அண்ட் கோ இ-வாலட் பெறுவதற்குரிய வாய்ப்பினை பெறுவர்.
இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பொது மக்கள் ஆயர் சிலாங்கூர் 2.0 செயலி வாயிலாக தங்கள் புகார்களை தெரிவிக்க வேண்டும் என்று அந்நிறுவனத்தின் முத்திரை மேலாண்மை மற்றும் வர்த்தக தொடர்பு பிரிவுத் தலைவர் முகமது அஷ்ராப் அகமது சுஹாய்பி கூறினார்.
ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு வெ.5.00 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். அவர்களை அத்தொகையை டச் அண்ட் கோ இவாலட் செயலியில் வரவு வைத்துக் கொள்ளலாம். வருமானம் தராமல் பயனற்றுப் போகும் நீரின் அளவைக் குறைப்பதற்கும் செலவினத்தைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
நீர் கசிவு தவிர்த்து, குழாய்கள் உடைந்த சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத இணைப்புகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என்று நேற்று இங்கு நடைபெற்ற கெரேத்தாப்பி சாரோங் நிகழ்வுக்குப் பின்னர் மீடியா சிலாங்கூரிடம் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் பங்கு கொண்ட இருபது கண்காட்சியாளர்களில் ஆயர் சிலாங்கூர் நிறுவனமும் ஒன்றாகும். 62 வகையான சுவைநீரை இந்நிறுவனம் இந்நிகழ்வில் பொது மக்களுக்கு வழங்கியது.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் பயன்தராத நீரின் அளவை 25 விழுக்காடாக குறைக்க ஆயர் சிலாங்கூர் உறுதிபூண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி ஆடாம் சபியான் கசாலி கூறியிருந்தார்.