இஸ்கண்டார் புத்ரி, செப்.13- ஆறு நாடுகளைத் தாக்கிய இஸ்ரேல ஸியோனிச ஆட்சியின் அடாவடித்தனமான நடவடிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
உலக சக்திகளால் வெளிப்படையாக ஆதரிக்கப்படும் ஆட்சி எவ்வளவு மூர்க்கத்தனமாகவும் மனிதாபிமானமற்றதாகவும் மாறிவிட்டது என்பதை இந்தத் தாக்குதல்கள் காட்டுகின்றன என்று அவர் கூறினார். ஒரே ஒரு நாடு ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் ஆறு நாடுகளைத் தாக்குவதன் மூலம் எவ்வளவு அடாவடித்தனமான முறையில் நடந்து கொள்ள முடியும் என்று அவர் நேற்று மலேசிய தேசிய சமய அரசு நிறுவனங்களின் கூட்டத்தை நிறைவு செய்து உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு மலேசியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஸியோனிஸ்டுகளின் வன்முறை மற்றும் மனிதாபிமானமற்ற ஆணவத்தைக் கண்டிக்கவும் நாளை டோஹாவில் நடைபெறும் அரபு-இஸ்லாமிய சிறப்பு உச்சநிலை மாநாட்டில் தாம் கலந்து கொள்ளவிருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக இன்றும் திங்கட்கிழமையும் நாட்டில் திட்டமிடப்பட்ட அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அவர் கூறினார். பாலஸ்தீனத்தில், குறிப்பாக காஸாவில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை குறித்து விவாதிக்கும் இந்த உச்சநிலை மாநாட்டிற்கு கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்-தானியிடமிருந்து அன்வாருக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு வந்துள்ளது.
கத்தார், பாலஸ்தீனம், லெபனான், சிரியா, துனிசியா மற்றும் ஏமன் ஆகிய ஆறு நாடுகளின் மீது இஸ்ரேல் கடந்த மூன்று நாட்களில் தாக்குதல்களை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.