பத்து கவான், செப் 13 – நாட்டில் உணவுப் பாதுகாப்பு கட்டுப்பாட்டை வலுப்படுத்த சுகாதார அமைச்சு எடுத்த முயற்சிகள் பலனளித்துள்ளன. நாடு முழுவதும் பதிவான உணவுப் விஷவாத சம்பவங்கள் 28.9 சதவீதம் குறைந்துள்ளது என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அகமது தெரிவித்தார்.
2025 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெற்ற 36 வார தொற்றுநோய் கண்காணிப்பு காலத்தில் 12,821 வழக்குகள் மட்டுமே பதிவாகின. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 18,034 வழக்குகள் பதிவாகியிருந்தன.
உலக சுகாதார அமைப்பின் தரவின்படி, ஆண்டுதோறும் உலகில் பத்து பேரில் ஒருவர்உணவு நச்சால் ஏற்படும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், 200க்கும் மேற்பட்ட நோய்கள் மாசுபட்ட உணவால் ஏற்படுகின்றன. ஆகையால், நாட்டில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு பல்வேறு உத்திகள் மற்றும் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் அப்ரன் வாக் 2025 நிகழ்வில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் உலகளவில் உணவால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஆண்டுதோறும் RM60 பில்லியன் வரை செலவாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். “Bersih, Selamat, Sihat (BeSS)” திட்டத்தின் கீழ் 2025 ஜூன் நிலவரப்படி 14,509 உணவகங்கள் சான்றிதழ் பெற்றுள்ளன என்றார்.


