கோலாலம்பூர், செப். 13- மலாயா பல்கலைக்கழக மாணவர் சங்கம் (UMANY) மெட்ரிகுலேஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, அப்பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று மலாயா பல்கலைக்கழக (UM) துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ ஸ்ரீ இர. டாக்டர் நூர் அஸ்வான் அபூ உஸ்மான் தெரிவித்தார்.
மெட்ரிகுலேஷன் திட்டம் ஒரு முழுமையான கல்வி அமைப்பு ஆகும். இது பல்வேறு பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான அணுகலை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு, எல்லா தரப்பினருக்கும் கல்வி வாய்ப்புகளை அதிகளவில் மற்றும் சமமாக வழங்கும் அரசின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும். நாடு முன்னேற்றம் பெறுவதற்காக, நீதிமுறை, மற்றும் மனித வள மேம்பாடு ஆகிய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையை மலாயா பல்கலைக்கழகம் தொடர்ந்து ஆதரிக்கிறது என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
மலாயா பல்கலைக்கழகம் எப்போதும் சமூகத்தில் கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவித்து வருகிறது. இது திறந்த மனப்பான்மை மற்றும் அறிவுசார் விவாதங்களை அடிப்படையாகக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்களின் முக்கிய அடையாளம் என அவர் தெரிவித்தார்.
ஆனால், அந்த சுதந்திரம் பொறுப்புணர்வோடு, பொதுக் கொள்கை தொடர்பான உணர்திறன் மற்றும் விளைவுகளை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இதற்கு முன்னர், UMANY தலைவர் தாங் யீ ஸீ மெட்ரிகுலேஷன் திட்டத்தை ரத்து செய்து, STPM-ஐ பொது பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஒரே தரமாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இதேவேளை, தேசிய மாணவர் ஆலோசனை கழகம், மெட்ரிகுலேஷன் திட்டத்தை உயர்கல்விக்கான முக்கிய வாயிலாகக் காத்திடும் வகையில் தங்களின் ஆதரவைத் தெரிவித்தது. அவர்களின், திட்டத்தை ரத்து செய்வது மாணவர்களின் கல்வி அணுகலை குறைக்கக் கூடும் என்றும், அது தேசிய கல்வியின் நீண்டகால நலன்களை பிரதிபலிக்காது என்றும் தெரிவித்தனர்.
தேசிய மாணவர் ஆலோசனை கழகம் வெளியிட்ட அறிக்கையில், மெட்ரிகுலேஷன் திட்டம் சிறந்த மாணவர்களை உருவாக்கவும், நாட்டின் திறமையான பணியாளர்களை உருவாக்கும் தேவைகளை பூர்த்தி செய்யவும் மிகப் பெரிய பங்கு வகித்து வந்துள்ளது என்று வலியுறுத்தியது.
கல்விக் கொள்கை திட்டமிடல், நாட்டின் நீண்டகால நலன்களை அடிப்படையாகக் கொண்டு, மனித வள மேம்பாட்டை முன்னிலைப்படுத்தி, எந்த பின்னணி கொண்டவராக இருந்தாலும் அனைவரும் தரமான மற்றும் சமமான கல்வி வாய்ப்புகளைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்,” என்று தேசிய மாணவர் ஆலோசனை கழகம் தெரிவித்தது.