கோலாலம்பூர், செப். 13- கம்போங் சுங்கை பாருவில் 37 குடியிருப்புகளை காலி செய்வதற்கான நடவடிக்கையின் போது ஏற்பட்ட கலவரத்தின் தொடர்பாக ஏழு சந்தேக நபர்களை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
15 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாதில் மார்சூஸ் தெரிவித்தார். அவர்களில் ஆறு பேர் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 26 வயதுடைய ஒருவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, RM1,500 அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
மற்ற சந்தேக நபர்களுக்கு தடுப்பு காவல் நீட்டிப்பதற்காக போலீசார் விண்ணப்பிப்பார்கள் என்றார். மேலும் கைது செய்யப்பட்ட சிலருக்கு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட பதிவுகள் உள்ளதாக நேற்று இரவு ஊடகச் சந்திப்பில் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் கம்போங் சுங்கை பாருவில் குடியிருப்பவர்கள் அல்ல, மாறாக ஒரு அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு வேறு நோக்கம் அல்லது சுயநலன் உள்ளதா என்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது, ஏனெனில் விசாரணை தொடர்கிறது. அதிகாரிகளுக்கு எதிராக மீண்டும் வன்முறை நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
போலீசார் இன்னும் சில சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர், மேலும் கூடுதல் கைது நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய கானொலிகள் பொதுமக்களிடம் இருந்தால், அவற்றை போலீசாரிடம் பகிர்ந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டர்.
இதற்கிடையில், சம்பவத்தின் போது தலையில் காயம் அடைந்த டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுசில்மி அஃபாண்டி சுலைமான் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.