கோலாலம்பூர், செப். 12 - கம்போங் சுங்கை பாருவில் நேற்று ஏற்பட்ட பதற்றத்திற்கு அப்பகுதியின் மறு மேம்பாட்டுத் திட்டத்தை நிராகரிக்குமாறு குடியிருப்பாளர்களைத் தூண்டும் வெளியாட்களே காரணம் என்று சமூக நல அமைப்பு (பி.எம்.கே.எல்.) கூறுகிறது.
சம்பவ இடத்தில் பதற்றத்தைத் தூண்டியதாகக் கூறப்படும் இந்த வெளியாட்களின் நடவடிக்கைகள் தேவையற்ற ஒன்றாகும் என்று அதன் தலைவர் ஹுசேன் சுல்கராய் கூறினார்.
குறிப்பாக பெரும்பாலான குடியிருப்பாளர்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்து மேம்பாட்டாளர் வழங்கிய இழப்பீட்டை ஏற்க ஒப்புக்கொண்டனர்.
மேலும், பல குடியிருப்பாளர்கள் இந்த மறு மேம்பாட்டின் நன்மைகளைப் புரிந்துகொண்டு தங்கள் வீடுகளை காலி செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். சிலர் வீட்டை விட்டு வெளியேறி நியாயமான இழப்பீட்டைப் பெற்றுள்ளனர், இதில் மேம்பாட்டாளரால் வழங்கப்படும் தற்காலிக வாடகை அலவன்சும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
எதிர்ப்பைத் தூண்டும் நோக்கத்துடன் இந்த வெளியாட்களின் லருகை தவறான புரிதல்களுக்கும் தேவையற்ற பதற்றத்திற்கும் மட்டுமே வழிவகுத்தது என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இத்திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் நில அலுவலகம் மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களால் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாடு முறையான மற்றும் சட்டப்பூர்வ வழிகளில் நடைபெறுகிறது என்பதை இது நிரூபிக்கிறது.
மேலும், சம்பவ இடத்தில் காவல்துறையினரும், மத்திய சேமப் படையினரும் இருந்தது பொது ஒழுங்கைப் பேணுவதற்காக மட்டுமே தவிர, குடியிருப்பாளர்களை அச்சுறுத்துவதற்கோ அல்லது தூண்டிவிடுவதற்கோ அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சுங்கை பாரு மறுமேம்பாட்டுத் திட்டத்தை சுமூகமாக செயல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது. இந்தப் பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது. ஏனெனில் இறுதியில் குடியிருப்பாளர்களே அதிகப் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.