ஷா ஆலம், செப்.12 - இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா வணிக மையத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வார இறுதி நாட்கள் மற்றும் விழாக்காலங்களின் போது இப்பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக பல சாலைகள் ஒரு வழித் தடமாக மாற்றப்பட்டுள்ளன என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.
இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக 25/60 ஜாலான் டாமாய் ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் 25/63 ஜாலான் மேவா சாலை ஒரு வழித்தடமாக இருந்த போதிலும் இங்கு வாகனங்கள் எதிர்திசையில் பயணிப்பதைத் தடுக்கும் விதமாக ஜாலான் 25/64 மக்மூர் சாலையின் முடிவில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், வர்த்தக பகுதிக்கு நுழைவதற்கு இரு தடங்களையும் வெளியேறுவதற்கு இரு தடக்களையும் ஏற்படுத்துவதற்கு மாநகர் மன்றம் முயற்சிகள் அங்குள்ள வணிகர்களின் ஆட்சேபம் காரணமாக தடைபட்டதாக அவர் சொன்னார்.
இப்பகுதியில் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வர்த்தக நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றுள்ளன. குறிப்பாக இங்கு புதிதாக 80 கடைகள் நிர்மாணிக்கபட்டு வியாபார நடவடிக்கைள் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக சாலைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வாகன நிறுத்துமிடங்களில் காணப்படும் அங்காடிக் கடைகளால் வாகனமோட்டிகளுக்கு ஏற்படும் இடையூகள் குறித்து கருத்துரைத்த அவர், மாநகர் மன்றத்திடம் முறையாக தற்காலிக அனுமதி பெற்று நடத்தப்படும் இத்தகைய கடைகள் பிறருக்கு இடையூறாக இல்லாமலிருப்பதை உறுதி செய்ய அவற்றை ஒரே இடத்தில் நடத்துவதற்கான ஏற்பாட்டை தாம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இங்கு போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இருந்த போதிலும் சில பொறுப்பற்ற வாகனமோட்டிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் காரணத்தால் நெரிசலையும் பிறருக்கு அசௌகர்யத்தையும் ஏற்படுத்துகிறது என்றார் அவர்.
சுமார் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் சுமார் 400 கடைகள், இரண்டு பெரிய சந்தைகள், பேரங்காடிகள், வங்கிகள் உள்ளிட்ட வர்த்த வளாகங்கள் அமைந்துள்ளன.
கணிசமான இந்திய வர்த்தகத் தளங்கள் உள்ள இப்பகுதியில் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த வர்த்தக மையத்திற்கு நுழைவதற்கு மூன்று வழிகள் உள்ள வேளையில் வெளியேறுவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது இந்த நெரிசல் பிரச்சனைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது