கோலாலம்பூர், செப். 12 - புதிய துறைகள் மற்றும் நடைமுறை சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் மாநிலத்தை பொருளாதார மந்த நிலையிலிருந்து பாதுகாப்பதற்கான பல முயற்சிகளை முன்னெடுக்க சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது.
வயது முதிர்ந்த சமூகத்தை சமாளிப்பது, உயிர் அறிவியல் துறையை வலுப்படுத்துவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர்&டி) மற்றும் பராமரிப்பு பொருளாதாரம் போன்ற முன்னெடுப்புகளை தனது நிர்வாகம் செயல்படுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பொருளாதார மந்தநிலை ஏற்படும் வரை காத்திருந்து செயல்பட முடியாது. உயிர் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அல்லது பராமரிப்பு பொருளாதாரம் என எதுவாக இருந்தாலும் ஆராய வேண்டிய புதிய பகுதிகளை நாம் அடையாளம் காண வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நேற்று சைம் டார்பி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026 சிலாங்கூர் பட்ஜெட் கலந்தாய்வு அமர்வை நிறைவு செய்து உரை நிகழ்த்தும்போது டத்தோஸ்ரீ அமிருடின் இவ்வாறு கூறினார்.
வெளிநாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கு மட்டுமல்லாமல் இந்தத் துறையில் நிபுணர்களை உருவாக்க உள்ளூர் திறமைகளைப் பயிற்றுவிப்பதிலும் வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவதன் மூலம் சிலாங்கூர் பராமரிப்புப் பொருளாதாரத்தில் வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சுகாதாரம், குறிப்பாக மனநல அம்சங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடுகள், வசதி மேம்பாடுகள் மற்றும் சமூக அடிப்படையிலான தலையீடுகளை செயல்படுத்துவதன் மூலம் பொது சுகாதாரத்தை மாநில அரசு
விரிவுபடுத்தும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த ஆறு முதல் எட்டு ஆண்டுகளில் நாம் எதை அடைய விரும்புகிறோம் என்பதை நிர்ணயித்து, நிர்வாகம், கல்வி, கிராமப்புற மேம்பாடு மற்றும் முதலீட்டு வசதி ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இன்றைய நிச்சயமற்ற பல முனை உலகில் சிலாங்கூர் மீள்தன்மையுடன் இருக்க வேண்டும். அதே போல் நெருக்கடியான காலங்களிலும் வாய்ப்புகளைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும்.
ஒவ்வொரு நெருக்கடியும் தியாகத்தின் புள்ளியைக் கொண்டு வந்து தலைமைத்துவத்திற்கு சோதனையாக மாறுகிறது. தலைவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும், தேவைப்படும்போது தவறுகளை ஒப்புக்கொள்ளவும் வேண்டும் என்று அவர் கூறினார்.
பொருளாதார மந்தநிலையை தவிர்க்க புதிய துறைகளை மாநில அரசு கண்டறியும்
12 செப்டெம்பர் 2025, 4:37 AM