ad

1.6 கிலோ மீட்டர் கேபிள்கள் திருட்டு - இ.சி.ஆர்.எல். திட்ட அமலாக்கத்தில் பின்னடைவு

12 செப்டெம்பர் 2025, 2:59 AM
1.6 கிலோ மீட்டர் கேபிள்கள் திருட்டு - இ.சி.ஆர்.எல். திட்ட அமலாக்கத்தில்  பின்னடைவு

குவாந்தான், செப். 12 - கிழக்கு கடற்கரை இரயில் திட்டத்தின் (இ.சி.ஆர்.எல்.) தெமர்லோ முதல் பெந்தோங் வரையிலான 1.6 கிலோ மீட்டர் பகுதியில் இணைப்புக் கேபிள்கள் அண்மையில் களவாடப்பட்டாக புகார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் தெமர்லோ-லஞ்சாங் தடத்தில் 1.08 கிலோ மீட்டர் வரையிலான பகுதியிலும் லஞ்சாங்- பெந்தோங் தடத்தில் 599 மீட்டர் வரையிலானப் பகுதியிலும் கேபிள்கள் திருடப்பட்டதாக சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ராக்சன் (இ.சி.ஆர்.எல்.) சென். பெர்ஹாட் (சி.சி.இ.சி.ஆர்.எல்.) நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

தெமர்லோ முதல் பெந்தோங் வரையிலான இ.சி.ஆர்.எல். தடத்தில் இணைப்புக் கேபிள்கள் திருடப்பட்ட சம்பவத்தை நாங்கள் கடுமையாக கருதுகிறோம்.

இந்த சம்பவம் இரயில் உள்கட்டமைப்புக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு இந்த தேசிய திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளையும் தாமதப்படுத்தும் என்று அது குறிப்பிட்டது.

கேபிள்கள், டிரான்ஸ்மீட்டர்கள் உள்பட அதிக மதிப்பு கொண்ட இரயில் உதிரிபாகங்கள் சம்பந்தப்பட்ட திருட்டுச் சம்பவங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் நிகழ்ந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளதோடு இந்த திட்டத்தின் மேம்பாட்டையும் நேரடியாகப் பாதிக்கும் வகையில் உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் செலவுகளை அதிகரிப்பதோடு முழு திட்டத்தின் கட்டுமானத்தையும் பாதிக்கிறது. பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் மாற்று உபகரணங்களை மறுபடியும் கொள்முதல் செய்வதற்கு பல மாதங்கள் பிடிக்கிறது.

இதனால், கிழக்கு கரை மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக நாட்டிற்கும் சமூகவியல் மற்றும் பொருளாதார ரீதியாக நன்மை தரக்கூடிய இந்த திட்டத்தை முடிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது என அந்நிறுவனம் கூறியது.

இந்த சம்பவம் தொடர்பில் லஞ்சாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதோடு காவல் துறையின் விசாரணையில் தாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்கி வருவதாக அது தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.